Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூன் 2024 மாதத்திற்குள் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்!

IMG_20240216_214849

ஜூன் 2024 மாதத்திற்குள் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்!

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

ஜூன் 2024 மாதத்திற்குள் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதுவரை 60,567 இளைஞர்களுக்கு அரசுப் பணிப் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

CM Announcement - Download here

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 27,858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம்.

அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி கள ஆய்வில் முதலமைச்சர் – இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும். இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிற திட்டங்களாக அமைந்திருக்கின்றன. இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகத்தான திட்டம்.

‘மக்களிடம் செல் – மக்களோடு வாழ் – மக்களுக்காக வாழ்’ என்பதுதான் அண்ணாவும், கலைஞரும் காட்டிய பாதை என்பதை மறந்துவிட மாட்டோம். ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கிற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்கிற திட்டம். அரசு திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றேன்.

பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகத் தான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக ‘மக்களுடன் முதல்வர்’ என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18-12-2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம். தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகிறது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகள முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்த திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி, வருவாய் துறையில் 42,962 பட்டா மாறுதல்களும், 18,236 பேருக்கு பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.

மின்சார வாரியத்தில் 26,383 பேருக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37,705 பேருக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டிட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது. குறு, சிறு, நடுத்தர தொழில்துறை மூலம் 1,190 பேருக்கு ரூ.60 கோடியே 75 லட்சம் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3,659 பேருக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது. கூட்டுறவு துறை மூலமாக, ரூ.6 கோடியே 66 லட்ச மதிப்பீட்டில் 766 பேருக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறது. மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கியிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


* திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டுவருகிறோம்.


* முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.


* இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive