"மருத்துவப் படிப்பில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நீட் தேர்வு" என்கிறது மத்திய அரசு. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தையும் மத்திய அரசு பல மடங்கு உயர்த்திவிட்டது.
கடுமையாகப் படித்து நீட் தேர்வில் ரேங்க் பெறும் எளிய குடும்பத்து மாணவர்கள், அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத சூழலில், அரசு ஒதுக்கீட்டிலேயே கிடைக்கும் தனியார் கல்லூரிகளில் லட்சங்களில் கட்டணம் செலுத்திப் படிக்கமுடியாமல் இடைவிலகுவது அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக நீட் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பணம் படைத்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள். தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் நிறைய இடங்கள் காலியாக இருந்ததால், நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களும்கூட எம்.டி, எம்.எஸ் போன்ற படிப்புகளில் சேரலாம் என்று கதவு திறந்து விட்டது இந்திய மருத்துவ ஆணையம். முதுநிலைப் படிப்புக்கான நீட் தேர்வில் மைனஸில் மதிப்பெண் பெற்றவர்களெல்லாம்கூட இதனால் இடம் கிடைக்கப் பெற்றார்கள்.
மருத்துவப் படிப்பு
தற்போது உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சுமார் 5000 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களும் தனி நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. 2023-24ம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 29, 30 தேதிகளில் நடைபெற்றது.
இத்தேர்வின் முடிவுகள் அக்டோபர் 15ம் தேதி வெளியானது. இப்படிப்புக்களுக்காக நடந்த கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரம் இடங்களுக்கு மேல் காலியாக இருக்கிறது. இதனால் நீட் தேர்வில் ஜீரோ கட் ஆப் மதிப்பெண் எடுத்தவர்களும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேரலாம் என்று இந்திய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு மூலமாகத் தகுதி வாய்ந்த மாணவர்களை மட்டுமே சேர்த்து மருத்துவத்துறையை புனிதப்படுத்துவதாக கூறிய மருத்துவ ஆணையம் இப்போது அந்தத் தேர்வையே அர்த்தமற்றதாக்கியிருக்கிறது.
Neurosurgery, Urology, Nephrology, Cardiology, Cardio Vascular & Thoracic Surgery, Neurology, Plastic Surgery, Interventional Radiology, Surgical Oncology, Critical Care Medicine, Medical Gastroenterology, Paediatric Surgery எனப் பல்வேறு பிரிவுகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணமாகப் பெறப்படுகிறது. இவற்றில் சில படிப்புகளுக்குப் பெரிதாக பணி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் அதுமாதிரியான படிப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதுவும் காலியிடங்களுக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.
இதுகுறித்துப் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், "எம்பிபிஎஸ் படிக்க நீட் கோச்சிங், எம்.டி, எம்.எஸ் படிக்க நீட் கோச்சிங், உயர் சிறப்புப் படிப்புகளுக்கு நீட் கோச்சிங் என்று மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் கோச்சிங்குக்கே மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வளவு செலவு செய்துவிட்டு படிக்க வந்தால் அங்கும் மிகப்பெரிய தொகையை கல்விக்கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது. தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம். இதை அரசு அனுமதிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்" என்கிறார்.
"எம்.டி படிப்புக்கே ஆண்டுக்கு 20 முதல் 25 லட்சம் வரை கட்டணம் வாங்குகிறார்கள். மூன்று ஆண்டுகளில் 75 லட்சத்துக்கு மேல் செலவு செய்யவேண்டியிருக்கிறது. இதெல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது. தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தினால்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாகவே மத்திய அரசு செயல்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் நிரம்பவில்லை. அங்கு கல்விக்கட்டணம் குறைவுதான். ஆனாலும் அந்த இடங்கள் நிரம்பாததற்குக் காரணம், மாநில அரசின் செயல்பாடுதான். படித்துக்கொண்டே அரசு மருத்துவமனைகளில் பிராக்டீஸ் செய்யும் மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான உதவித்தொகையை அரசு வழங்குகிறது.
சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு வரும்போது மாணவர்களுக்குத் திருமணமாகியிருக்கும். அரசு தரும் 50,000 ரூபாயில் தனியாக வீடெடுத்து குடும்பத்தை நிர்வகிக்க முடியாது. கல்விச்செலவுக்கே அது போதாது. பிரைவேட் பிராக்டீஸும் பண்ண முடியாது. வேலைப்பளு அப்படி! இவ்வளவு செலவு செய்து, குடும்பத்தை விட்டுத் தனித்திருந்து மூன்றாண்டுகள் ஒரு படிப்பை முடித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்காதபட்சத்தில் அவர் வாழ்க்கை என்னாகும்? எல்லோரும் மருத்துவம் முடித்துவிட்டாலே நிறைய சம்பாதிப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் பல பிரிவுகளைப் படித்தவர்களுக்கு இங்கே உரிய வேலை கிடைப்பதேயில்லை. அதனாலேயே நிறைய பேர் குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை தேர்வு செய்வதில்லை. இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்தத் துறையில் மருத்துவர்களே இருக்கமாட்டார்கள்..." என்கிறார் சாந்தி.
சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவம் என்பது உயிர்காக்கும் துறை. இத்துறையை மத்திய அரசு கைப்பந்தாக்கி விளையாடுகிறது. ஒரு பக்கம் மருத்துவம் கார்ப்பரேட் ஆகி எளிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வரும் சூழலில் மேலும் மேலும் இதுமாதிரியான முடிவுகளை எடுப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல!
இப்படி எல்லாம் சொம்படிச்சி தா ஆசிரியர் நிலை இப்படி இருக்கு....
ReplyDelete