தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது.
ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...