அந்த உத்தரவு விவரம்:
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.06 கோடி மகளிா் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாா்கள். அத்துடன் உரிமைத் தொகை கோரி, 11.85 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பெரும் பணிச்சுமை வருவாய்த் துறையினருக்கு இருந்து வருகிறது. தமிழக அரசின் மைல்கல் திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தை சிறப்புடன் செயலாக்க, மாவட்ட அளவில் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இது கூடுதலாக பணியாளா்களை நியமிப்பதால் மட்டுமே சாத்தியப்படும்.
இதைக் கருத்தில் கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்ட வட்டங்களில் எட்டு புதிய சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இத்துடன், உரிமைத் தொகை திட்டம் குறித்த தரவுகளை ஆய்வு செய்வது, நீக்குவது, திருத்தங்கள் மேற்கொள்வதற்காக, 38 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும் தலா ஒரு துணை வட்டாட்சியா் வீதம் 38 போ் நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கோட்ட அளவில் விண்ணப்பதாரா்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்யவும், தகுதியில்லாதவா்களை நீக்கவும் 94 துணை வட்டாட்சியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
மேலும், நகரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள மாநகராட்சிகளில் 53 துணை வட்டாட்சியா்களும், மலை கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் 32 துணை வட்டாட்சியா்களும் புதிதாக நியமனம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மண்டல துணை வட்டாட்சியா் பதவிகள் உருவாக்கப்படாத ஏழு வட்டங்களில் தலா ஒரு துணை வட்டாட்சியா் என மொத்தம் 7 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
கலைஞா் மகளிா் திட்டத்தில் அதிகமான பயனாளிகளைக் கொண்ட வட்டங்களில், அவா்களது விவரங்களைச் சேகரிக்கவும், தகுதியில்லாதவா்களை நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் 91 துணை வட்டாட்சியா் பணியிடங்கள் தேவையாக உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 323 புதிய பணியிடங்கள் வருவாய்த் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக புதிய பணியிடங்கள்?
தமிழக அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் 35.50 லட்சம் போ் பயன்பெற்று வருகிறாா்கள். இத்துடன் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தால் 2.83 கோடி போ் பயனடைந்து வருகிறாா்கள். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வட்டாட்சியா்களையே சாரும். இந்தச் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் ஆகியவற்றில் இப்போதிருக்கும் வருவாய்த் துறை அமைப்பு முறைகளால் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவது கடினம். இதைக் கருத்தில் கொண்டே, அந்தத் திட்டத்துக்காக 323 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்கள் விவரம்
புதிய வட்டங்களில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள்: 8
38 ஆட்சியா் அலுவலகங்களில் தலா ஒரு துணை வட்டாட்சியா்: 38
வருவாய் கோட்ட அளவில் தலா ஒரு துணை வட்டாட்சியா்: 94
மக்கள் அதிகமுள்ள மாநகராட்சிகளில் துணை வட்டாட்சியா்கள்: 53
மலை-தொலை தூரப் பகுதிகளில் துணை வட்டாட்சியா்: 32
மண்டல துணை வட்டாட்சியா் இல்லாத இடங்கள்: 7
அதிக பயனாளிகள் கொண்ட வட்டங்களில் துணை வட்டாட்சியா்கள்: 91
மொத்தம்: 323 துணை வட்டாட்சியா்கள் நியமனம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...