60 ஆண்டுகால கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வரலாற்று பிழையினை செய்துவிட்டார் கல்வித்துறை அமைச்சர்” என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார், மூத்த தொழிற்சங்கவாதியும் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான வா.அண்ணாமலை.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த டிசம்பர்-21 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 243 – க்குத்தான் இந்த காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், அவர்.
”தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி விதிகள் திருத்தம் (Amendment) செய்து அவ்வளவு அவசரமாக அரசிதழில் வெளியிட வேண்டிய காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பும் அவர், ”இந்த அரசாணையினால், 80% விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார். அங்குசம் இதழுக்காக , வா.அண்ணாமலை அவர்களுடன் கலந்துரையாடினோம்.* என்னதான் சார் பிரச்சினை ? என்ன சொல்கிறது, அரசாணை 243 ?
கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி தொடங்கியபோது வேகமாக வந்த குலக்கல்வி திட்டத்தினை காமராஜரும், பெரியாரும் ஆபத்து வராமல் தடுத்து பாதுகாத்தார்கள். அப்போது, குக்கிராமங்கள் வரையில் விரிவான அளவில் தொடக்க கல்வியை கொண்டு செல்லும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அலகாக மையப்படுத்தி தொடக்கக்கல்வி நிர்வாகத்தினை கட்டமைத்திருந்தார்கள்.
உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் மாவட்ட அளவில் (District board) அமைத்திருந்தார்கள்.
இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் மட்டுமல்லாமல் இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும்கூட இந்தக் கட்டமைப்பில் கை வைக்கவில்லை.ஆனால், என்ன துணிச்சல்? குறைந்தபட்சம் ஆசிரியர் சங்கங்களுடன்கூட கலந்துரையாடாமல், தான்தோன்றித்தனமாக ஊராட்சி ஒன்றிய அலகினில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதாக மாற்றியமைத்திருக்கிறார்கள். மாவட்ட அளவில்கூட முன்னுரிமை பட்டியலை தயாரிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென்று நீதிமன்ற வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்களைக்கூட கணக்கில் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற பெருமை இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே உரியதாகும். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நேரடியாக இனிமேல் இல்லை என்று இந்த அரசாணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆண்டுகால கல்வி நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து வரலாற்று பிழையினை செய்திருப்பதோடு, இதனை அமைச்சரின் சாதனைப்பட்டியலிலும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது.
* இதனால் ஆசிரியர்களுக்கு அல்லது கல்விச்சூழலில் என்ன பாதிப்பு ஏற்படும் என்கிறீர்கள்?
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இருவரில் எவர் அந்த பதவிக்கு முன்னர் வந்துள்ளார்களோ? அவர்கள் பதவி உயர்வு பெறலாம் என்பது இந்த அரசாணையில் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு பெற முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இல்லையென்றால் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகலாம் என்ற நீண்ட கால நடைமுறை விதிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெருத்த பாதிப்பினை திட்டமிட்டே ஏற்படுத்தி உள்ளார்கள்.
வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243 மூலம் 80% விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாநில அளவில் முன்னுரிமை என்று வருகிற போது 80% விழுக்காடு பெண்ணாசிரியர்கள் தான் தற்போது தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
மாநில அளவில் முன்னுரிமைப்பட்டியல் அமல்படுத்தும் போது பக்கத்து ஒன்றியத்தில் பதவி உயர்வு வந்தால் கூட அவர்கள் செல்ல மாட்டார்கள். அதே போல் மாறுதல் வாய்ப்பு வந்தாலும் பெண்ணாசிரியர்கள் பணி முன்னுரிமைப் படி வேறு ஒன்றியங்களுக்கு கூட செல்ல மாட்டார்கள். பதவி உயர்வு வேண்டாம் என்று பணித்துறப்பு செய்யும் நிலைமைதான் தொடரும். இதனால், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களாகவே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்காகவே இந்த அரசாணை வெளியிடப்பட்டு 80% விழுக்காடு ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அரசாணை ஆகும். அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் வருகின்ற பாதிப்புகளை பற்றி மனசாட்சியுடனாவது கலந்துரையாடி இருக்கலாம்.
* தொடக்ககல்வி ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிராக நிறுத்திவிட்டார்கள் என்கிறீர்களா? ஆசிரியர் சங்கங்கள் இந்த விசயத்தை எவ்வாறு அணுகுகின்றன?
பட்டதாரி ஆசிரியர்கள் பல பேர் அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு விதிப்படி வருகின்ற பதவி உயர்வினை நாங்கள் வரவேற்று மகிழ்பவர்கள். ஆனால், இந்த அரசாணை மூலம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் இதுவரை விதிப்படி பெற்று வந்த பதவி உயர்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், எதிர்க்கிறோம்.
ஆசிரியர்கள் முன்வைத்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் தொடரும் காலகட்டத்தில் மாநில அளவில் இந்த முன்னுரிமைப் பட்டியலையும் வெளியிட்டு அச்சத்தினை ஏற்படுத்துகிற போது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பணர்வை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது இந்த அறிவிப்பு.
எமிஸ் இணையதள பதிவுகள், எண்ணும் எழுத்தும் திட்டம், பயிற்சி வகுப்புகள் எல்லாம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் நடத்த விடாமல் கவனித்து வருகிற பொறுப்பினை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதில்லை. மக்கள் மன்றத்திற்கு செல்வோம்.
இந்த அரசாணை அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் போர்க்களத்தில் நின்று போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.
* அரசாணையை அமல்படுத்தினால், போராட்டத்தில் இறங்குவோம் என அரசுக்கு மிரட்டல் விடுக்கிறீர்களா?
மிரட்டல் எல்லாம் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறோம் அவ்வளவுதான். கடந்த கால வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலே புரியும். ஆசிரியர் சமுதாயத்தின் பங்களிப்பையும் அதன் வலிமையையும் பற்றி அமைச்சருக்கு யாரேனும் எடுத்துரைக்க வேண்டும் என்பதைத்தான் கனிவோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்டோம். செல்வாக்குள்ள அதிமுக 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் இழந்தார்கள். 2018-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அலட்சியப்படுத்தியதால் 39 இடங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளையும் அவர் காலத்தில் இழந்தார், என்பது வரலாற்று நிகழ்வுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
இளமையான துடிப்பான அமைச்சரையல்லவா கொண்டிருக்கிறது, பள்ளிக்கல்வித்துறை? அவரிடம் நேரடியாகவே, முறையிடலாமே?
வாஸ்தவம்தான். ஆனால், அதற்கான வாய்ப்பை வழங்குவதில்லையே. ஆசிரியர் சங்கங்களுடன், சங்க நிர்வாகிகளுடன் பேசுவதற்கு அமைச்சருக்கு எங்கே நேரம் இருக்கிறது? அதுவும் எங்களைப்போன்ற மூத்த தொழிற்சங்கவாதிகளை இந்த அமைச்சர் கண்டு கொள்வதே கிடையாது என்பதெல்லாம் எங்களுக்கு வருத்தம்தான்.
இவருக்கு முன் பல அமைச்சர்களைப் பார்த்திருக்கிறோம். தலைவர் கலைஞரேகூட, பள்ளிக்கல்வித்துறை தொடர்பான எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் எதற்கும் ஒருமுறை எங்களைப்போன்ற மூத்த தொழிற்சங்கவாதிகளிடம் விவாதித்துக்கொள்ளுங்கள் என்றுதான் அமைச்சர்களிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் அறிவுறுத்துவார். அதிமுகவின் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித்துறை அதிகாரிகளை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
தற்போது அமைச்சராக இருப்பவரோ, தொழிற்சங்கவாதிகளையும் கண்டுகொள்வதில்லை; அதிகாரிகளையும் கண்டுகொள்வதில்லை. சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. ரசிகர்கள் கூட்டத்தை கூடவே வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறைக்கு என்றிருந்த மாண்பை குலைத்திருக்கிறார்கள். மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளிவந்தால் என்ன? வராவிடால் என்ன? தாங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இரவோடு இரவாக மாவட்டம் விட்டு மாவட்டம் நிர்வாக மாறுதல்களும் நடைபெற்று வந்ததை நாங்களும் அறிவோம்!
இந்த அரசாணை வெளிவந்து வெளியிட்டதற்குப் பிறகு இனி பதவி உயர்வுகளையும் எந்தக் கலந்தாய்வும் இல்லாமல் தங்களின் அமைச்சகத்தின் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்துவதற்குதான் இந்த அரசாணை வழி வகுக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறோம்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே! வெளிவந்துள்ள அரசாணை 243 ஐ திரும்பப் பெற வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள வரலாற்றுப் பிழையிலிருந்தும், பழியிலிருந்தும் பாதுகாத்திடும் பொறுப்பினை மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் எடுத்திட வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
தொடக்கக் கல்வியை பாதுகாப்பதற்காகவும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஏற்படப் போகும் பேராபத்தினை தடுத்து நிறுத்துவதற்காக அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் உடன் சென்னையில் கூடி அவர்களின் உணர்வலைகளை நேரலைகளாக தெரியப்படுத்த இருக்கிறார்கள் என்பதை தகவலுக்காக தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.” என்கிறார், மூத்த தொழிற்சங்கவாதி வா.அண்ணாமலை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...