Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் புதிய நிபந்தனையுடன் நியமனம் செய்ய உத்தரவு

தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றனர்.



ஆனால், 2013-14-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.இவற்றை சமாளிக்க தொகுப்பு ஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



இதுதவிர பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர்களை கொண்டு இயங்கும் நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் காலி பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.



அதை ஏற்று, முதல்கட்டமாக 1,000 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து, தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:



தொடக்க கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்தபிறகு, 2023-24-ம் கல்வி ஆண்டில் கண்டறியப்பட்ட 8,643 எண்ணிக்கையிலான காலி இடங்களில் 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது.



அதற்கு முன்பாக, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிககாலி இடங்கள் உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்யவேண்டும்.



5 ஆண்டு பணிபுரிய நிபந்தனை

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அதேநேரம், கடந்த ஆகஸ்ட் மாதமே இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கிவிட்ட நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அதற்கான அறிவிப்பாணையை கூட வெளியிடவில்லை. வாரியத்தின் இந்த மெத்தனத்தால் தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர்.



எனினும், இடைநிலை ஆசிரியர் பணிநியமன போட்டி தேர்வு குறித்த அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டெட்’ முதல் தாள் தேர்ச்சி பெற்ற சுமார் 48 ஆயிரம் பட்டதாரிகள் இந்த பணிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive