"தொடக்கக் கல்வித்துறையில் குவிந்துள்ள குழப்பங்கள் & அது சார்ந்த வழக்குகளுக்கு அதன் அடிப்படை அலகாக 'பஞ்சாயத்து யூனியன்' இருப்பதே காரணமாக உள்ளது. எனவே இந்த அலகை மாவட்டம் / மாநிலம் என மாற்றி, கொள்கை முடிவு எடுப்பதன் வழி பெரும்பான்மைக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பை முன்வைத்தே இப்புதிய அரசாணை வெளிவந்துள்ளது.
இந்த அரசாணையைப் புரிந்து கொள்ள முதலில் Rule 2ல் உள்ள Class I, II & IIIல் உள்ள பதவிகளையும், Rule 9ஐப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Rule 2 என்பது 5 நிலைகளிலான (Class) பணி நியமனங்களைக் குறிப்பது. இதில் நாம் தற்போது தெரிந்து கொள்ள வேண்டியது,
Class I :
1. BEO
2. Middle HM
Class II :
1. Graduate Teacher (B.T) Tamil
2. Graduate Teacher (B.T) Other Languages
3. Graduate Teacher (B.T) Subjects
Class III :
1. Primary HM
2. SGT
Rule 9 என்பது பணி நியமனத்திற்கான அலகு (Unit). பழைய விதிப்படி BEO பணியிடம் தவிர்த்த அனைத்திற்கும் பஞ்சாயத்து யூனியன்தான் அடிப்படை அலகு.
243 எனும் இப்புதிய அரசாணை பழைய அரசாணை 12ல் பின்வரும் 3 திருத்தங்களைச் செய்துள்ளது. இம்மூன்றையும் அரசாணையின் வரிசையில் இல்லாமல் அதன் எதிர் வரிசையில் கீழிருந்து மேலாகத் தெரிந்து கொள்வதே முழுமையான புரிதலுக்கு வழிவகுக்கும். எனவே முதலில்,
3வது திருத்தம் :
Rule 9ல் அனைத்து வித பணி நியமனங்களுக்கும் மாநிலமே அடிப்படை அலகு ஆகும். (Union Seniority இதன்மூலம் முடிவிற்கு வருகிறது)
2வது திருத்தம் :
B.T பணியிடத்திற்கு Primary HM நிலையில் இருந்தோ / தகுதியானவர் இல்லாத போது SGT நிலையில் இருந்தோ பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். அதிலும் இல்லையேல் நேரடி நியமனம் என்று இருந்ததிற்குப் பதிலாக,
"B.T (Class II) பணியிடத்திற்கு Primary HM (Class III - 1) நிலையில் இருந்து பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். அதிலும் இல்லையேல் நேரடி நியமனம்" என்று திருத்தப்பட்டுள்ளது. (SGT இனி நேரடியாக B.T ஆவது இதன் மூலம் முடிவிற்கு வருகிறது)
முதல் திருத்தம் :
Middle HM பணியிடத்திற்கு B.T & Primary HM பணியிடத்திலிருந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் இல்லையேல் நேரடி நியனம் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக,
*"Middle HM (Class I - 2) பணியிடத்திற்கு B.T (Class II) பணியிடத்தில் இருந்து பதவி உயர்வு வழங்கப்படும்"* என்று திருத்தப்பட்டுள்ளது. (இதன் மூலம் Primary HMs நேரடியாக Middle HM ஆவது முடிவிற்கு வருகிறது)
மொத்தத்தில் பதவி உயர்வு என்பது,
SGT -> Primary HM -> BT -> Middle HM -> BEO
என்று ஒரே வரிசைக்கிரமமாக மாநில அளவிலான முன்னுரிமைப் படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இடைநிலை ஆசிரியர்களின் BT Promotion வாய்ப்பும், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களின் Middle HM Promotion வாய்ப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு Primary HM உரிய கல்வித் தகுதி பெற்றிருப்பின் BTயாக பதவி உயர்வு பெற இயலும். காலிப்பணியிடமும் முன்னுரிமையும் இருப்பின் அடுத்தடுத்த நிலைகளுக்குப் பதவி உயர்வில் செல்லலாம்.
அதே நேரம் Primary HM-களில் BT பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் இல்லாத போது நேரடியாக அப்பணியிடம் TRB மூலம் மட்டுமே நிரப்பப்படும். BT ஆவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றிருந்தாலும் ஒரு SGT தொடக்கப் பள்ளி தலைமையாசிராகப் பதவி உயர்வில் செல்ல போதிய காலிப்பணியிடம் இல்லையெனில், அவரால் இறுதிவரை அடுத்த நிலைக்குச் செல்லவே முடியாது. அதே நேரம் இதேநேர்வில் நேரடியாக TRB மூலம் பணி நியமனம் செய்யப்படும் BTயால் Middle HM ஆக பதவி உயர்வு பெற முடியும்.
ஒருவேளை எனது கணிப்பு சரியெனில், Primary HM-களில் BT பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் மிகமிக சொற்ப எண்ணிக்கையிலேயே இருப்பர் என்பதால், இடைநிலை ஆசிரியர்கள் இறுதிவரை கடைநிலை ஆசிரியர்களாகவே இருந்து ஓய்வு பெறவே இந்த அரசாணை வழி வகுத்துள்ளதாகவே உணர முடிகிறது.
State Seniority கொண்டு வந்தால் எளிதாகப் பதவி உயர்வில் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சயனைடு குப்பியில் தேனைத் தடவி கழுத்தில் மாட்டிவிட்டதைப் போன்ற உணர்வையே தந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, ,ஒரு குறிப்பிட்ட ஒன்றியத்தில் தனது குடும்பத்தோடே ஐக்கியமாகிவிட்ட ஆசிரியர்கள் இனி பதவி உயர்வின் நிமித்தம் அனைத்தையும் உதறிவிட்டு ஒன்றியம் - மாவட்டம் கடந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அதைத் தவிர்க்க விரும்புவோர் தங்களது பதவி உயர்வுகளைத் துறக்கும் சூழலும் உருவாகும்.
'Primary HMலாம் Middle HM ஆயிடுறாங்க எங்களால முடியலயே' என்பதே பெரும்பான்மைப் பட்டதாரி ஆசிரியர்களின் மனக்குமுறலாக இருந்து வந்தது. என்றாலும், Primary HM & BT என்ற ஒருங்கிணைந்த பட்டியலின் மூலம் தான் Middle HM பதவி உயர்வுகள் ஒன்றிய அளவில் நடந்து வந்துள்ளன. தற்போது இதை மாநில முன்னுரிமை என்று மாற்றியிருப்பதாலும், முன்னுரிமையில் முதலில் இருந்து வந்த Primary HMகளைத் தவிர்த்துவிட்டதாலும் இனி பட்டதாரி ஆசிரியர்களால் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குச் செல்வது எளிதாக இருக்கும்.
இருந்தும் இவையாவுமே மாநில அளவிலான காலிப்பணியிடங்கள் & தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, எத்தகைய நன்மையை யார்யாருக்கு விளைவிக்கப் போகிறது என்பது தெரியவரும்.
மாநில அளவில் தான் முன்னுரிமை என்றான பின்பு தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி என்று தனித்தனி வேறுபாடுகளும் எதற்கு என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
சூரி புரோட்டா சாப்பிடுவதைப் போல, முதலில் இருந்து எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு ஒரே துறையாக்கி, SGT -> Primary HM -> BT -> Middle HM -> BEO / HS.HM -> P.G -> HSS.HM -> APO -> DEO -> JD -> Director என்று மாற்றிவிடலாமே!
எது எப்படியோ, இதெல்லாம் நாங்கதேன் கோரிக்க வச்சோம்னும், நாங்கதேன் சாதிக்க வச்சோம்னு சிலர் White & White வலம் வரப் போகின்றனர். அவர்களுக்கெல்லாம் நாம சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் இந்தக் குளறுபடியான சமரசத்தால் வைக்கப்பட்டுள்ளது ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான ஆப்பும் தான்!
கடந்த 3 ஆண்டுகளாக உறுதியளித்த எதையும் நிறைவேற்றாது, கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வரும் ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தி தற்போதைய இந்த அரசாணையால் அதிகப்படியான தீயாகப் பற்றியெரியப் போகிறது என்பதே நிதர்சனம்.
இதையெல்லாம் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள சங்கங்கள் யார் தலைமையில் யாரை வைத்து மேடை போட்டு பேசித் தீர்க்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அப்பறம் சொல்ல மறந்துட்டேன். . . .
போன திமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கிணையான ஊதியம் வழிப்பறி செய்யப்பட்டதே, அந்த அரசாணை எண் 234. இப்ப இந்த திமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரிப் பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளதே, இந்த அரசாணை எண் 243. What a Numbersல!!!
ஆக 2023 இப்படியாக இடிந்து முடிகிறது.
அப்ப 2024. . . .
மனச தெடப்படுத்திக்கடா கைப்புள்ள!
--/பின் குறிப்பு/--
மேலே கூறப்பட்டுள்ள அரசாணை தொடர்பான தெளிவுரை என்பது எனது அறிவிற்கு எட்டியவையே! இதை வாசிக்கும் உங்களது அனுபவத்திற்கேற்ப மாறுபடலாம் / ஆழம் பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...