காலியாக உள்ள ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு புதுச்சேரி அரசு பள்ளிக்கல்விதுறை சார்பில் மண்டல அறிவியல் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, இந்திரா நகர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நடந்தது.கடந்த 2 நாட்கள் நடந்த மாநில அளவிலான கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது.
சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:புதுச்சேரி கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 900 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு போட்டி தேர்வுகளில் நம் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அடிப்படையாக உள்ளது.அதனால் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டு வந்துள்ளோம். பல ஆண்டுகளாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில் 143 பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் எந்தவீத தலையீடு இன்றி திறமை, தகுதி அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தற்போது 300 பட்டதாரி ஆசிரியர், 67 மொழி ஆசிரியர், 91 விரிவுரையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பினால் தான் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க முடியும். அதனால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பயிற்சி அளிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று தலை சிறந்தவர்களாக உருவாகி நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார்.அரசு கொறடா ஆறுமுகம், கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...