Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

" ஆணாதிக்க சமூகத்தில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்துவரலாம் என்பதே பெரிய விஷயம் ! " - சுகிர்தராணி

vikatan%2F2023-12%2F197cabb8-8b4c-43e9-9f98-383306646d1d%2Fvini_800x400__3_

அரசுப்பள்ளி ஆசிரியைகள் புடவைக்குப் பதிலாக சுடிதாரும் அணியலாம்' என்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸின் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றாலும் இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் சிலர் மாற்றுக் கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், ஆசிரியைகள் சுடிதார் அணிவது குறித்து கவிஞரும் ஆசிரியருமான சுகிர்தராணியிடம் கேட்டேன்.

"பெண்களுக்கு கல்வியும் அதன்மூலம் கிடைக்கும் பொருளாதார வசதிகளால் மட்டுமே தன்னம்பிக்கை கிடைக்காது. தன்னை கட்டுபடுத்தும் ஆடையிலிருந்து வெளியில் வந்து, விரும்பும் உடையை அணியும்போதுதான் கட்டற்ற சுதந்திரத்தை உணர்வார்கள். அமைச்சர், அன்பில் மகேஸ் அவர்கள் இந்த விஷயத்தைச் தெரிவித்தபோது, எங்கள் பள்ளியிலேயே ஆசிரியைகளுக்கு அப்படியொரு சந்தோஷம். ஏற்கெனவே, அரசாணை இருந்தாலும், ஆசிரியர்களிடையே குழப்பமும் எதிர்ப்பும் நிலவி வந்தன. இந்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு எல்லாவற்றையும் தீர்த்து வைத்திருக்கிறது.


இப்போ, ஒரு ஸ்கூலுக்கு ரெண்டு மூணு பேரு சுடிதார் போட்டுக்கிட்டு வந்தா, அஞ்சு வருஷத்துல எல்லோருமே சுடிதார் போட்டுக்கிட்டு வர ஆரம்பிச்சுடுவாங்க. புடவை கட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போறதுல நிறைய சிக்கல் இருக்கு. போக்குவரத்து நெரிசலில் பைக் ஓட்டிச் செல்லும்போது அடிக்கடி பிரேக் பிடிக்கவேண்டியிருக்கும். அப்படி பிரேக் பிடிக்கும்போது இடது காலை கீழே வைக்கவேண்டியிருக்கும். அப்போது, புடவை சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், மக்கள் தொகை அதிகமாகிடுச்சு. பேருந்தில் செல்லும்போது திடீர் திடீர்ன்னு புடவையில போட்டுருக்கிற பின் கழண்டுடும். புடவையை சிலர் தெரியாம மிதிச்சுடுவாங்க. அப்போது, ப்ளிட் கீழே விழ வாய்ப்பு இருக்கு.

மாணவர்கள் மத்தியில் அன்னைக்கு நாள் முழுக்க புத்துணர்வா பாடம் நடத்தணும்னா, ஆசிரியர்களுக்கான உடை நீட்டா இருக்கணும். காட்டன் புடவையை அணிந்து கசங்கி போயி ஸ்கூலில் நிற்போம். அது என்ன தன்னம்பிக்கையைக் கொடுக்கும்?

மிக முக்கியமா மாணவர்கள் முன்னாடி கையைத் தூக்கித்தான் போர்டுல எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதும்போது ஜாக்கெட் டைட்டா இருக்கிறதால ரொம்ப சிரமமா இருக்கும். எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு எழுத முடியும்? அப்படி, கையை தூக்கும்போது பல அசௌகரியங்கள் இருக்கும். இதனாலேயே பெரிசா ப்ளிட் வெச்சு புடவை கட்ட வேண்டியிருக்கு. இன்னொன்னு, முதுகும் தெரியும். வெயில் சூழ்நிலைகளில் சிறிய நெக் வெச்ச ஜாக்கெட் போட முடியாது. நிறைய ஸ்கூலில் மின்விசிறி கூட கிடையாது. அப்போ, காற்றோட்டமில்லாம இறுக்கமா பாடம் நடத்தவேண்டிய சூழல். குழந்தைகளை தப்பா நினைக்கல; இதையெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டாங்க. ஆனா, அவங்களுக்கு அப்படி தோணிடுமோன்னு ஒரு அச்சம் ஏற்படுது.

கை தெரிஞ்சுடுமோ, இடுப்பு தெரிஞ்சுடுமோன்னு ஒரு மாதிரி அதைப்பற்றியே யோசிக்கிறதால பாடம் நடத்துவதில் கவனம் சிதறுது. மழைக்காலத்தில், புடவையை ஒரு கையால தூக்கி பிடிச்சுக்கிட்டு மற்றொரு கையால குடையை பிடிச்சுக்கிட்டு போறது ரொம்ப சிரமம். அதேபோல, உடம்புல அடிபட்டுட்டா, ஜாக்கெட் போட்டுட்டு போறது சிரமம். சுடிதார்ன்னா ஈஸியா மாட்டிக்கிட்டு வந்துடலாம். எல்லா வகையிலும் சுடிதார்தான் சிறந்தது.

மிக முக்கியமாக, சுடிதார் அணிந்து பாடம் நடத்தினால் கையை எப்படி வேண்டுமானாலும் அசைத்து ஆக்‌ஷனோடு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். புடவை கட்டியிருந்தால் அப்படி கையை தூக்க இயலாது. அரசியல் மேடைகளில்கூட பாருங்க, பிரியங்கா காந்தி எல்லாம் ரெண்டுக் கையையும் நல்லா மேல தூக்குவாங்க. புடவை கட்டியிருக்கிறவங்களால சரியா தூக்க முடியாது. புடவை பாரம்பர்யம்தான். ஆனால், சுடிதார் கம்பீரமானது, கான்ஃபிடன்ட்டை கொடுக்கக்கூடியது.

அதனால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சுடிதார் அணியலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருப்பதற்கு பாராட்டுகளும் நன்றிகளும். அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்த பிறகும் சுடிதார் அணிய ஆசிரியர்கள் பலரிடம் கூச்சமும் தயக்கமும் இருக்கிறது.

அதனால், கல்வித் துறையில் இருக்கும் பெண் உயர் அதிகாரிகளான இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் போன்றோர் தத்தம் அலுவலகத்திற்கும், பள்ளிகளுக்குப் பார்வையிடச் செல்லும்போதும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்தும் போது சுடிதார் அணிந்துசென்று இதை சாதாரணமான ஓர் உடையாக மாற்றலாம்.


உயர் அதிகாரிகள் சுடிதார் அணிந்து பள்ளிகளுக்கு வரும்போது ஆசிரியர்களிடம் கூச்சமும் தயக்கமும் நீங்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அவ்வுடை அணியும்போது வித்தியாசமாகத் தெரியாது.


குறிப்பாக தலைமையாசிரியர்கள் சுடிதார் அணிந்தால், மிகச் சிறப்பு. ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு கம்பீரத்தோடு அணிவார்கள்" உற்சாகமுடன் பேசுபவரிடம், "விதிகளுக்கு உட்பட்டு துப்பட்டா போட்டுக்கொண்டு வரவேண்டும் என்பது சரியானதா?" என்று கேட்டபோது,“இன்னும் நம் சமூகம் பண்படல. ஒரு பெண்ணை துப்பட்டா இல்லாம சாதாரணமா பார்க்குற பார்வை வரணும். அது, வரும்போது சாதாரண உடல்மாற்றம்தான் என்பது பொது சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும். அப்போது, தானாகவே துப்பட்டாவும் விலகிப் போயிடும்.


இப்போதான் பெண் ஆசிரியர்கள் சுடிதார் போடலாம்ங்குறதை ஏற்றுக்க ஆரம்பிச்சிருக்கு இந்த சமூகம். அதேமாதிரி, துப்பட்டாவும் காணாம போயிடும். இந்த ஆணாதிக்க சமூகத்தில் சுடிதார் அணிந்துவரலாம் என்பதையே பெரிய விஷயமா பார்க்குறேன். அதேமாதிரி, பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். மாணவிகளுக்கு சுடிதாருக்கு மேல ஓவர் கோட் கொடுக்கிறாங்க. அது எதுக்கு கொடுக்கணும்? அதையும் மாற்றணும். உடை என்பது நார்மல் ஆக்கப்படணும்" என் கோரிக்கையுடன் முடித்தார்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive