கட்டுரையாளர்;
சு.உமா மகேஸ்வரி
ஒருங்கிணைப்பாளர்
அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு
கல்வித் துறையில் அதிகாரப் போக்கு கோலோச்சுவதின் தொடர்ச்சியாக கனவு ஆசிரியர் விருது கமுக்கமான தேர்வாக அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனத் தலையீடுகள் கல்வித் துறையை கலங்கடித்த வண்ணம் உள்ளன! கனவு ஆசிரியர் விருது தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்? வேண்டியவர்களுக்கு விருதென்றால் தேர்வு எதற்கு? என்பதே ஆசிரியர்களின் குமுறலாக உள்ளன!
2023 ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கான விண்ணப்பத்தை EMIS இணையதளத்தின் வழியாகப் பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு SCERT வழியாக பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்தது. இந்த விருதுக்கு 8096 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்ததாக அறியமுடிகிறது.
அதனைத் தொடர்ந்து முதல் நிலைக்கு 1536 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து இரண்டாம் நிலைத் தேர்வுக்கு தகுதிபெற்ற 964 ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் அவர்கள் காட்டும் அணுகுமுறை தொடர்பான உத்திகள் மதிப்பீடு செய்யப்பட்டதாம். மேற்படி மூன்று தேர்வுகளையடுத்து இவற்றில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றதாக கருதப்படும் கனவு 380 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், தேர்வில் கலந்து கொண்ட பல நூறு ஆசிரியர்கள் இந்த விருதுப் பட்டியலில் அதிருப்தி தெரிவித்ததுடன் இறுதிக் கட்ட நிலை மதிப்பெண்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, ஏன் இத்தனை கமுக்கம்? என்கின்றனர்.
கனவு ஆசிரியர் விருதுக்கான பின்னணி என்ன?
சென்ற ஆட்சியில் செங்கோட்டையன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது, 2018 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது! (அரசாணை நிலை எண் 267) கனவு ஆசிரியர் விருது பெற, ஐந்து ஆண்டுகளுக்குமேல் பணி அனுபவம், கற்றல் கற்பித்தலில் மேம்ப்பட்ட அணுகுமுறை. மாணவர்களின் வாசிப்புத்திறனை வளப்படுத்தியது. மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் ஆசிரியச் செயல்பாடு, பள்ளி வளாகத்தைப் பசுமையாக மாற்றிய செயல்பாடு போன்றவை மதிப்பிடப்பட்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்’ என அறிவித்தது அன்றைய கல்வித் துறை. தகுந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாநிலக் குழு, மாவட்டக் குழு என இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனச் சொல்லப்பட்டது!
மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்கள் வீதம் மாநிலம் முழுவதிலிருந்தும் 192 ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட இருப்பதாகவும் அரசாணை விவரித்தது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்ய முடியாது என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதே போல வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது என்பதும் முக்கியமான தகுதிகளுள் ஒன்றாக இருந்தது.
ஆசிரியர்களின் கற்பித்தல் பணி , மாணவர்கள் மீதான அவர்களது கூடுதல் அக்கறை, கட்டமைப்பு சார்ந்து அவர்கள் எடுக்கும் முயற்சிகள், கல்வி இணைச் செயல்பாடுகள் , டிஜிட்டல் வகுப்பறைகளைக் கையாளுதல், வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட தகுதிகள் இந்த விருதுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன.
இவற்றைப் பின்பற்றி 2018 மற்றும் 2019 ஆகிய இரு வருடங்களும் கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. 2020 ல் கொரோனா காரணத்தினால் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவில்லை. புதிய அரசு அமைந்த பிறகு 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்படவில்லை.
அரசாணையைப் புறந்தள்ளி விதிகளை மாற்றியது ஏனோ?
கனவு ஆசிரியர் விருதுக்கான தகுதிகள்,விதிகள் ஆகியவை சென்ற ஆட்சி காலத்தில் தெளிவாக இருந்தும் புதிய அரசு அதைப் புறந்தள்ளி தாறுமாறாக விதிமுறைகளை வகுத்து போட்டித் தேர்வுகள் போல இணையவழித் தேர்வுகளின் வழியாக, கனவு ஆசிரியர்களை 2023 ஆண்டு தேர்வு செய்துள்ளது குழப்பங்கள் ஏற்படுத்தியுள்ளது.
# ஏற்கனவே நடைமுறையில் இருந்த, ஆசிரியர்களது களச்செயல்பாடுகள் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை
# வெறும் இணையம் வழியாக ஒரு ஆசிரியரின் திறன் மதிப்பிடப்படுகிறது
# வகுப்பறைக் கற்பித்தல் குறித்து எந்த நேரடி அனுபவமும் இல்லாத மதிப்பீடுகள்!
ஆகிய குறைபாடுகளினூடே இணைய வழித் தேர்வாக மதிப்பீடு செய்யப்பட்டு 2023 கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டதானது ஆசிரியர் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியருக்கான தகுதியே வகுப்பறைக் கற்பித்தல் தான். ஆனால் அதை இணைய வழியில் எப்படிக் கண்டறிய முடியும் என்பதே ஆசிரியர்களின் அடிப்படைக் கேள்வி.
கனவு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய கார்ப்பரேட் நிறுவனமா?
சென்ற ஆட்சியில் கல்வித் துறையில் பொறுப்பில் உள்ள கல்வி அலுவலர்கள் அனைவரும் தான் தேர்வுக் குழுவில் இடம்பெற்று இருந்தனர். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் தொடங்கி கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்(SSA) வரை பலரையும் இணைத்து மாவட்டத் தேர்வுக் குழு அமைத்திருந்தனர்.
அதே போல மாநில அளவில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில், பள்ளிக் கல்வி இயக்குனரை தலைவராகவும், கல்வித்துறையின் அத்தனை இயக்குநர்களும் தேர்வுக் குழு உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலை அந்த அரசாணை 267 வழங்கியிருந்தது.
ஆனால், இந்த ஆண்டு யார் இந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர் என்று அறிந்ததில் தான் ஆசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது!
கனவு ஆசிரியர்களைத் தேர்வு செய்தது தனியார் நிறுவனமான CENTA (Centre for Teacher Accreditation (CENTA) Pvt. Ltd. ) என்ற கார்ப்பரேட் நிறுவனம்! அரசின் விருதை வெளியிலிருக்கும் ஆதிக்க சக்திகள் தீர்மானிப்பதா? என்பதே ஆசிரிய சமூகத்தின் ஆதங்கம்!
ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி ஜெயின்
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் திறன்கள், மாணவர்களைக் கையாளும் முறை, ஒரு ஆசிரியர் பள்ளிக்காக செய்யும் முன்னெடுப்புகள் ஆகியவை இணைய வழியை மட்டும் வைத்து எப்படி இவர்களால் மதிப்பிட முடியும் ?
ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரது பணிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் ஆகியோரைத் தவிர துறையில் பணியாற்றும் கல்வித்துறையினர் என அந்த ஆசிரியரோடு சம்பந்தப்பட்டவர்களால் தானே மதிப்பீடு செய்ய முடியும்?
அதை விடுத்து ஒரு தனியார் நிறுவன ஊழியர் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீடு செய்ய நியாயமில்லை!
ஏன் கல்வித் துறைக்கு தகுதிகள் இல்லையா என்பதும் நாம் முன்வைக்கும் கேள்வியாகும்! தனியார் நிறுவன ஊழியர்களை மதிப்பீட்டாளர்களாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் கல்வித்துறைக்கு என்ன தேவை ஏன் வந்தது? என்பதையும் ஆசிரியர் சமூகம் அறிய விரும்புகிறது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் ஆசிரியர் சமூகம் அறிய விரும்புகிறது.
தேர்வு முறையும் மதிப்பெண்கள் குழப்பங்களும்
தேர்வு மூன்று நிலைகளில் நடந்துள்ளது. முதல் நிலையில் 35 மதிப்பெண்கள்! இரண்டாம் நிலையில் 40 மதிப்பெண்கள்! மூன்றாம் நிலையில் 25 மதிப்பெண்கள் என அனைத்துமே இணைய வழியில் நடத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நிலைக்கான தேர்வு அறிவிப்பு, வழிகாட்டுதல்கள், மதிப்பெண்களுக்கான விவரங்கள் , அனுமதிச் சீட்டு போன்ற ஆவணங்கள் சார்ந்தவை சம்மந்தப்பட்ட ஆசிரியரின் EMIS எண் உள்நுழைவில் மட்டுமே தெரியப்படுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவே கூட டெலிகிராம் குழு தான் உருவாக்கப்பட்டது. இப்படி எல்லாமே இணைய வழியில் கமுக்கமாக நடத்தப்பட்டன.
இந்த கனவு ஆசிரியர் விருதுக்கான தேர்வு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.
குளறுபடிகளுக்கு மேல் குளறுபடிகள்!
ஆசிரியர் ரஜிதா (காஞ்சிபுரம் மாவட்ட மதுரமங்கல மேல்நிலைப் பள்ளி)
முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் முதல் தேதி நடைபெற்றது. எமிஸ் இணைய தளத்தின் மூலம் இணைப்பு (link) அனுப்பப்பட்டது.. அதனுள் நுழைந்து காணொளிக்குள் (video on) சென்று தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இணைப்புக்குள் நுழைந்த பின் அது சரியாக வேலை செய்யவில்லை. 11 மணிக்கு நடைபெற இருந்த தேர்வு 3 மணிக்கு மேல் தான் எழுத முடிந்தது. ஆறு மணி வரை தொடர்பு விட்டு விட்டு கிடைத்தது. அன்றும் எழுத முடியாதவர்கள் வேறு ஒரு நாளில் எழுதினார்கள்.
இரண்டாம் நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களில் நடைபெற்றது. நான்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மையத்தில் நடத்தப்பட்டது.
இது போல மொத்தம் பத்து மையங்களில் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு EMIS individual log ல் download செய்து தேர்வு எழுத சென்றோம். அதிலும் மதுரை மாவட்ட மையம் மட்டும் நான்கு முறை மாற்றப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு பெரும் சிரமத்துடன் தேர்வு எழுத நேர்ந்தது.
இரண்டாம் நிலைத் தேர்வு நடைபெறுவதற்காக , மே மாதத்தில் நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாவட்டக் கலந்தாய்வும் ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாம் நிலை தேர்வு EMIS வழியாக Zoom meet மூலம் நடைபெற்றது. அப்பொழுதுதான் எங்களுக்கு இதை நடத்துபவர்கள் CENTA என்று தெரியவந்தது. இது ஜூன் 26 முதல் ஜுலை 3 வரை நடைபெற்றது.
எல்லாமே விதிமீறல்களா?
ஆசிரியர் குமரன் (வேலூர் மாவட்டம்)
மூன்றாம் நிலைத் தேர்வு நடைபெறும் முன்னர், ஆசிரியர்களது சந்தேகங்களைக் களைய ஒரு ஜூம் மீட் நடத்தப்பட்டது. அப்பொழுது அந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் மூன்று நிலைகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் எடுத்த மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் (Consolidated marks)
மூலம் கனவு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறினார் .
முதல் நிலை 35 இரண்டாம் நிலை 40 மூன்றாம் நிலை 25 மதிப்பெண்கள். மொத்தம் 100. ஆனால் மூன்றாம் நிலை மதிப்பெண்கள் வெளியிடப்படவே இல்லை. தொகுப்பு மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் கனவு ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே எங்கள் வேதனை. நாங்கள் எடுத்த மதிப்பெண் எவ்வளவு? எவ்வளவு மதிப்பெண் குறைந்ததால் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற தகவல் தெரியவில்லை.
நான் முதல் இரண்டு நிலைகளில் எடுத்த மதிப்பெண்கள் 80%க்கும் அதிகம். ஆனால் மூன்றாவது நிலையில் எத்தனை மதிப்பெண்கள் எனத் தெரியவில்லை. நான் விருதுக்கும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் முதல் இரண்டு நிலைகளில் 50% க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வானது எப்படி என புரியவில்லை. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படி இரண்டு நிலைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் நிலையில் மதிப்பெண்கள் மறைக்கப்பட்டதால் மனவருத்ததில் உள்ள ஆசிரியர்கள் கல்வித் துறையினருக்கும் கல்வி அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கிறோம். மூன்றாம் நிலைத் தேர்வு மதிப்பெண்களை வெளியிடுங்கள். அல்லது மூன்றாவது நிலையில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் கனவு ஆசிரியர்களாக அறிவியுங்கள்.
கலந்து கொண்டு தேர்வானவர்கள் பற்றி நமக்கு எந்த எதிர்மறைக் கருத்தும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்தே விமர்சனம் வைக்கிறோம். இரண்டாம் நிலையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் நிலையில் நல்ல முறையில் பாடம் எடுத்த பிறகும், பல ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை! ஆனால், இரண்டாம் நிலையில் 60-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இறுதியில் தேர்வாகியுள்ளனர் என்பதை எப்படி ஏற்பது? எனக் கேட்கின்றனர்.
கனவு ஆசிரியர் 2023 விருதுக்கான இறுதி தேர்வு பட்டியல், ஆசிரியர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே எதார்த்தமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வழியாக முன்வைக்கும் கேள்விகள்;
# எல்லா போட்டித் தேர்வுகள் மற்றும் துறைத் தேர்வுகளுக்குப் பிறகும் விடைத் தொகுப்பு வெளியிடுவது அடிப்படை அறம். ஆனால், கனவு ஆசிரியர் 2023 விருதிற்கான முதல் இரு நிலைகளுக்கான விடைத் தொகுப்பு வெளியிடாதது ஏன்? விடைத் தொகுப்பு இன்றி எவ்வாறு ஆசிரியர்கள் தங்களது ஐயப்பாடுகளை நிவர்த்திக்க முடியும்?
# கனவு ஆசிரியர் 2023 விருதிற்கான மூன்றாம் மற்றும் இறுதி நிலைக்கான பங்கேற்பாளர்களின் மதிப்பெண் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை?
# 380 பேர் அடங்கிய இறுதி பட்டியலில் பாட வாரி, மாவட்ட வாரியான விவரங்கள் ஏன் இடம் பெறவில்லை. ஒவ்வொரு பாடத்திலிருந்தும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் எத்தனை பேர் தேர்வாகியுள்ளனர்
# ஒவ்வொரு பாடத்திற்கும் தெரிவு செய்யப்பட நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் (cut off) மதிப்பெண் எவ்வளவு? மேலும் ஒவ்வொரு பாடத்திலும், பங்கேற்பாளர்கள் பெற்ற அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச மதிப்பெண் எவ்வளவு? மதிப்பெண் வாரி தரவரிசைப் பட்டியல் ஏன் வெளியிடவில்லை? இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளதே!
# மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு செய்யப்பட்டது? மூன்று நிலைகளுக்கான சராசரி மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டதா அல்லது ஒவ்வொரு நிலைக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் கூட்டுத் தொகையின் மூலம் 75% க்கும் அதிகமானோரின் எண்ணிக்கை தருவிக்கப்பட்டதா?
# பட்டியலில் தலைமையாசிரியர்களின் பெயர்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறு தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் என்ற பணிநிலையில் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்?
# மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன், நெருக்கமாக பணியாற்றும் பல ஆசிரியர்கள் இவ்விருதிற்கு தெரிவு செய்யப்பட்டது எப்படி?.
# மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படும் புலனக் குழுக்களில் உள்ள ஆசிரியர்கள், மிகவும் குறிப்பாக இணைய தொழில்நுட்பம் சார்ந்த புலனகுழுக்களில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர்கள் கணிசமானோர் இவ்விருதிற்கு தேர்வானது எப்படி?
இப்படியான அனைவரின் ஐயப்பாடுகளை போக்கும் வகையில், உரிய தகவல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு, கனவு ஆசிரியர் 2023 விருதின் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஆசிரியர் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுவும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு கூறே!
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 , கல்வி முறையை இணையவழிக்கு எடுத்துச் செல்லும் வேலையைத்தான் எதிர்வரும் காலங்களில் திட்டமிடுகிறது. அதன் நீட்சியாக ஆசிரியர்களை இணைய வழிக்கல்வி கற்பிக்கும் திறன் பெற்றவராக மாற்றும் வேலையைச் செய்து வருகிறது. நம் தமிழ்நாடு இன்னும் ஒரு படி மேலே சென்று ஆசிரியர்கள் கற்பித்தலை இணையவழி முறையில் மதிப்பீடு செய்வதும் தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடுவதும் NEP 2020 தான்.
அதே போல் கல்விக் கொள்கை ஆசிரியர்களுக்கான திறன்களை மதிப்பீடு செய்யும் முறைகளையும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களுக்கான பாராட்டுகள் ஊக்க ஊதியம், உள்ளிட்ட பலவும் திறன்களை மதிப்பீடு செய்தே வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன் பல வடிவங்கள் இன்றைய நாட்களில் தமிழ்நாட்டில் பின்பற்றப் படுகிறது. இந்தக் கனவு ஆசிரியர் தேர்வும் போட்டித் தேர்வுகள் போலவே நடத்தப்பட்டு முதல் 55 இடங்கள் பெற்றிருப்பவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லும் முடிவுகள் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
என்ன செய்யலாம்?
வகுப்பறையில் மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கும் ஆசிரியர்களை அடையாளம் காண்பது உயர் கல்வி அலுவலர்களின் தலையாய கடமை. அடுத்தடுத்த நிலையில் மாவட்டம் மாநிலம் என்று அனைத்து நிலைகளிலும் இது நடக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் ஃபுரோபைல் EMIS பதிவேற்றங்களில் ஆசிரியர்கள் குறித்து அவர்களது பணி விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகும், ஆசிரியர்களையே விண்ணப்பிக்கச் சொல்வதும் அவர்கள் மனதில் போட்டி மனப்பான்மையை உருவாக்குவதும் ஆரோக்கியமான வழிவகைகள் அல்ல.
சில நூறு ஆசிரியர்கள் இது போன்ற விருதுகளுக்காகவே ஆவணங்களை மட்டுமே தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுவதும் இன்னும் சிலர் அதிகார வர்க்கத்தின் அருகில் இருப்பதாலேயே விருதுகள் பெறுவதும் தமிழ்நாட்டில் தொடரத்தான் செய்கின்றன.
தகுதியில்லாத பல ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவதும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதும் பிழையாகும்.இவற்றை எல்லாம் முறைப்படுத்த வேண்டும். மாணவர்களையும், பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து ஆசிரியர்களை அங்கீகரிக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
கட்டுரையாளர்;
சு.உமா மகேஸ்வரி
ஒருங்கிணைப்பாளர்
அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3)
அதுலாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இது எழுதுறாளே இவ என்ன சாதி ? அடுத்த சாதியை இழிவான முறையில் பேசும் குறியீட்டு பயன்படுத்துற இவ என்ன சாதியா இருப்பா? தைரியமாக தன் சாதியை யும் சொல்லலாமே?
ReplyDeleteI HAD APPEARED FOR THE EXAM AND GOT SELECTED.
ReplyDeleteI DID NOT KNOW ANYONE IN SCERT, DEO, CEO OFFICE, POLITICIANS OR IN ANY STATE LEVEL WHATSAPP GROUPS INCLUDING CENTA.
I AM FROM A RURAL VILLAGE.
I JUST TOOK THE EXAM IN A STEP BY STEP MANNER.
INFACT WHEN I WAS APPLYING FOR THE CONTEST I DID NOT HAVE ANY IDEA ABOUT IT BUT TOOK IT AS A CHALLENGE.
CAN WE BE SURE THAT 100 PERCENT MERIT BASIS FOLLOWED WHEN DISTRICT OR STATE LEVEL TEAMS WERE SELECTING THE WINNERS.
IN MY OPINION INSTEAD OF BLAMING OTHERS, LET US FOCUS ON IMPROVED PERFORMANCE IN THE COMING YEARS.
3RD LEVEL EXAM WAS LIKE MICRO TEACHING USED IN B.ED. COLLEGES AND PRESENCE OF MIND IS NECESSARY FOR A GOOD TEACHER.
THAT'S WHAT EXPECTED IN 3RD LEVEL EXAM.
IT IS BETTER TO LEARN TO ADOPT TO THE SYSTEM RATHER THAN BLAMING THE SYSTEM.
THANK U.