ஏராளமான அரசு சலுகைகள் இருந்தும் தனியார் பள்ளியை மாணவர்கள் நாடியதால் சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது. இதனால் அப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் முயற்சிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. காளையார்கோவில் ஒன்றியம் ஏரிவயல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அருகேயுள்ள சூராணம் தனியார் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஏரிவயலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது ஒரு மாணவர் மட்டும் உள்ளார்.
அவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு ஓராசிரியர், ஒரு சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பள்ளி, சமையற்கூடக் கட்டிடங்கள் சேதமடைந்ததால், தற்போது கிராம சேவை மையத்தில் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சமையற்கூடம் இல்லாததாலும் ஒரு மாணவர் மட்டுமே படிப்பதாலும் சத்துணவும் சமைப்பதில்லை. அம்மாணவர் வீட்டில் இருந்தே உணவு கொண்டு வந்துவிடுகிறார். மேலும் அம்மாணவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் ஆசிரியர் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. இதனிடையே ரூ.22.99 லட்சத்தில் வண்ண ஓவியங்களுடன் பள்ளியும், ரூ.69,000-க்கு சமையற்கூடமும் கட்டப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியும் தனியார் பள்ளியை நாடியதால், அப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது.
ஒன்று என குறிப்பிடப்பட்ட வருகை பதிவு பலகை
இதையடுத்து சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் முயற்சிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘ தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க மறுக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வெளிநாடு சுற்றுலா போன்ற சலுகைகள் உள்ளன. இதை எடுத்துக் கூறி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அதி காரிகள் முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...