Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண் படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்

 1172422

பொறியியல் படிப்பதே நல்ல வேலையைப் பெற்றுத்தரும், வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கற்பிதங்கள் எல்லாம் இன்று மதிப்பு இழந்துவிட்டன. வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் பல படிப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முன் வரிசைகட்டி நிற்கின்றன. அந்தப் படிப்புகளில் முக்கியமானவை வேளாண் படிப்புகள்.

யார் படிக்க முடியும்? - பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை முதன்மையாகப் படித்தவர்கள் மட்டுமே வேளாண் படிப்பில் சேர முடியும். இருப்பினும், அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி போன்ற படிப்புகளில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களைப் படித்தவர்களும் சேர முடியும்.

எவ்வளவு மதிப்பெண்கள் தேவை? - வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் / விலங்கியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினரும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம்.


வேளாண் படிப்பில் சேரும் வழிகள்: வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதலாம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் கல்லூரிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இந்த நுழைவுத்தேர்வு குறித்த விவரங்களை https://icar.nta.nic.in என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் தவிர, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தனியே விண்ணப்பித்து, வேளாண்மைப் படிப்பில் சேரலாம்.


கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளே. இவைதவிர, 29 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரலாம்.


குறைவான கட்டணம்: அரசுக் கல்லூரியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 30,000-க்குக் குறைவாகவும், தொழில்நுட்ப பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 70,000-க்கும் குறைவாகவும் பெறப்படுகிறது. ‘முதல் தலைமுறைப் பட்டதாரி’ என்றால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்:


பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வேளாண்மை

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) தோட்டக்கலை

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வனவியல்

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் (ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்)

பி.டெக். - வேளாண் பொறியியல்

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு

பி.டெக். - உணவுத் தொழில்நுட்பம் (ஃபுட் டெக்னாலஜி)

பி.டெக். - உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி)

பி.டெக். - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்

பி.எஸ்சி. - வேளாண் வணிக மேலாண்மை


வேலை வாய்ப்பு: வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுநர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


மேன்மைக்குரிய படிப்பு: வேளாண் படிப்புகள் இன்று சிறந்த தேர்வாக மாறி இருக்கின்றன. வேளாண் படிப்புகள் தனியொருவரின் மேன்மைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகின் மேன்மைக்கும் உறுதியளிக்கும் வல்லமை கொண்டவை. மேலும், மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை, உணவு சார்ந்த படிப்பும் தொழிலும் நிலைத்திருக்கும் என்பதால், வேளாண் படிப்புகளைப் படிப்பதன் பயன் ஒருபோதும் நீர்த்துப் போகாது.


- நிஷா | நன்றி: இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive