தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்குதல், கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம், ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சென்னை மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சென்னையில் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்வது விடுவது தொடர்பான தீர்மானம், முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகள்) பயிலும் 25,468 மாணவ மாணவியருக்குக் காலை உணவுத் திட்டத்தினை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தம் கோரி பணி மேற்கொள்ள அனுமதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மீது வாக்கெடுப்பு நடந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, `ஏற்கெனவே சென்னை மாநகராட்சியின்கீழ் காலை உணவுத் திட்டம் நன்றாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதற்காக தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் விடவேண்டும்' என கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு, சென்னை தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே தனியாருக்கு இவ்வாறு ஒப்பந்தம் விடப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதாகவும் மேயர் பிரியா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில், பெரும்பான்மை அடிப்படையில் சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...