தர்மபுரி அடுத்த நத்தஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முசோலினி. இவர், பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக அமைத்துள்ள அருங்காட்சியகம் வரவேற்பை பெற்றுள்ளது.முசோலினி கூறியதாவது:நான் ஆங்கிலத்துறை ஆசிரியராக தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் பணியாற்றிய போது, எனக்கு சில சிலைகள் கிடைத்தன. அவற்றில், கடகத்துார் கோவில் அருகே கிடைத்த சேதமடைந்த ஒரு சோழர் காலத்து சிலை, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் உள்ளது.நம் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும். அதற்கு பழங்கால பொருட்களை சேகரிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது.
தொடர்ந்து பழங்கால பொருட்களை சேகரித்தேன். முதல் முறையாக, 2005ல் அவ்வையார் பள்ளியில் அருங்காட்சியகம் துவக்கினேன். அங்கு இட பற்றாக்குறை காரணமாக பல பொருட்களை பராமரிக்க முடியவில்லை.இடமாறுதல் பெற்று அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்கு அருங்காட்சியகம் அமைத்தேன். கடந்த 2018ல் பதவி உயர்வு பெற்று நத்தஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியராக ஆனேன்.இதையடுத்து, 2019ல் பழங்கால பொருட்களின் மதிப்பை அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்துறை அலுவலர் உட்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெற்று, பள்ளி வளாக மாடியில் அருங்காட்சியகம் அமைத்தேன்.
இதில், நான் சேகரித்த நான்கு பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி, தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணம் ஓலைச்சுவடி, திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடு களிமண் அச்சு.கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விஜயநகர பேரரசு கால சிலைகள், முகலாய மன்னர் பயன்படுத்திய இரும்பு வாள் உட்பட, பல்வேறு பழங்கால பொருட்கள் உள்ளன.மான் கொம்பு, 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய டேப் ரிக்கார்டர், சினிமா எடுக்க பயன்பட்ட ரிக்கார்டர், ஒலி ரிக்கார்டுகள், கிராம போன், 16 எம்எம் சினிமா பிலிம் புரஜக்டர், ரோனியோ மிஷின் என தற்போதைய 2கே கிட்ஸ் பார்க்காத பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளேன்.எங்கள் பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பார்த்து, பழங்கால பெருமைகளையும், வரலாற்றையும் அறிந்து வருகின்றனர். மற்ற அரசு, தனியார் பள்ளி மாணவர்களும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...