மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டு தேசிய கல்விக்கொள்கை திருத்தி அமைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.
மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின்கீழ் வரும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆர்) சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்பு வசதிகளை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, 'தேசிய கல்விக்கொள்கை-2020 கல்வியில் தொழில்நுட்பம், ஒளிமயமான, சமத்துவமான, முன்னேற்றம் மிகுந்த எதிர்காலத்தை நமது நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்ஐடிடிடிஆர் நிறுவனம் சர்வதேச அளவிலான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. இதன்மூலம் உலகளவில் பலரும் இந்த நிறுவனத்தை தேடி வருவார்கள். இதுவரை 3,000 ஆசிரியர்கள் 107 நாடுகளில் இருந்து வந்து பயிற்சி பெற்றுள்ளனர். இது மேலும் உயரும். வெளிநாடுகளுக்கு நமது மாணவர்கள் சென்று படித்து வந்த காலம் மாறி, தற்போது மற்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்தியாவுக்கு வந்தும் படிக்கும் அளவுக்கும் நம் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜி20 மாநாட்டில்கூட கல்விக் கொள்கை குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கை-2020 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அதில் சில திருத்தங்களை கொண்டுவர பரிந்துரை செய்துள்ளன. அதை ஏற்று தேசியக் கல்விக் கொள்கையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய கல்வி கொள்கையை மாணவர்கள், பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில கல்விக் கொள்கை நாடகம்:
இதற்கிடையே மத்திய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்க்காரிடம், தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தனியாக கல்விக் கொள்கையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'அது ஒரு நாடகம் போன்றது. தயிர் சோறுக்கும், சோற்றில் தயிர் ஊற்றி சேர்த்து உண்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. தேசிய கல்விக் கொள்கையால் மாணவர்களும், பெற்றோரும் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...