வருமானத்திற்கு அதிகமாக ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 354.66 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையிலும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்து வருபவர் ராமேஸ்வர முருகன். இவருக்கு தொடர்புடைய சென்னை மற்றும் கோவை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
ராமேஸ்வர முருகன், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, அவரது தந்தை சின்ன பழனிச்சாமி, தாயார் மங்கையகரசி, அவரது மாமனார் அறிவுடை நம்பி, மாமியார் ஆனந்தி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ராமேஸ்வர முருகன் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் 354.66% சொத்துக்கள் சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த நான்காண்டு காலத்தில் இவர்கள் சேர்த்து உள்ள சொத்துக்கள் தொடர்பான பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வர முருகன் பெயரில் ஒரு கோடியே 98 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும், அவரது மனைவியுடைய பெயரில் 6 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் வங்கிகளும் முதலீடு விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வருவாயை விட கடந்த நான்கு ஆண்டுகளில் 354.66% வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
ராமேஸ்வரம் முருகன் முதலில் துவக்கப் பள்ளி இயக்குனராகவும் பிறகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராகவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளிலும் பதவி வகித்து வந்துள்ளார். இவர் வகித்து வந்த பொறுப்புகளில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் மூலமாக கிடைத்த வருவாயை முதலீடு செய்து கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...