ஆசிரியர் அமைப்புகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் மூன்று வகையான ஆசிரியர் அமைப்புகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக் கல்வித் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
திமுக தேர்தல் வாக்குறுதியான 177 -ன்படி மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், வாக்குறுதி 181-ன் படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், வாக்குறுதி 311ல் கூறியிருப்பது போல சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீண்டும் நடைபெற்று வரும் போராட்டம் மூலமாகவே தெரியவருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்போராட்டத்தில ஈடுபட்டுள்ள ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...