நாடு முதல் நதி வரை பெண்ணாக உருவகித்து கொண்டாடுகிறோம். அந்தப் பெண்ணும் நம் வாழ்வில் தாயாக, சகோதரியாக, தோழியாக இருந்தால் போற்றுகிறோம். இப்படியான சமூகத்தில்தான் இன்னமும் பெண் சிசுக் கொலைகள் நடந்து வருகின்றன. ஆண் குழந்தைகளுக்கு எளிதில் கிட்டும் வாய்ப்புகள் பலதும், பெண் குழந்தைகளுக்கு வழங்காது புறக்கணிக்கும் போக்கும் தொடர்ந்து வருகிறது.
இந்த அவலத்துக்கு முடிவு கட்டவும், பெண் குழந்தைகளின் பிறப்பு முதல் எதிர்காலம் வரை சிறப்பாக அமையவும், அவர்களுக்கான சம உரிமை மற்றும் அதிகாரமளித்தலுக்காகவும், சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு தினமாக அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து விவாதிக்கக் கூடிய 1995ம் ஆண்டின் பெய்ஜிங் மாநாட்டில், முதல் முறையாக சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் உரிமைகளுக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 2011ம் ஆண்டு, ஐக்கிய நாடு பொது சபை சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அக்டோபர் 11 அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 2012 முதல் ஆண்டுதோறும் அக்.11 அன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கென, காலத்தின் தேவைக்கேற்ப கருப்பொருள் ஒன்றும் வருடாந்திரம் அறிவிப்பாகி வருகிறது. 2023ம் ஆண்டின் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள், ’பெண் குழந்தைக்கான உரிமைகளில் முதலீடு செய்யுங்கள்: நம் தலைமை, நமது நல்வாழ்வு’ என்பதாகும்.
சமூகத்துக்கான மாற்றங்கள் அனைத்தும் நம்மில் இருந்தும், நமது வீட்டிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். வீடுகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சமமாக பாவித்து வளர்க்க வேண்டும். குறிப்பாக, பெண்களை மதிப்பது குறித்து ஆண் குழந்தைகளுக்கு அறிவுறுத்தி வளர்ப்பதும் கூட இந்த சமூக மாற்றத்தில் சேரும்.
முக்கியமாக பெண் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை உறுதி செய்யப்பட வேண்டும். சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக நிற்க உதவுவதும், சமத்துவம் மற்றும் வளமான எதிர்காலத்தை அவர்களுக்கு கிடைக்க வழி செய்யும்.
பெண் குழந்தைகளை போற்றுவோம். பெண் குழந்தைகளை அரவணைத்து வளர்ப்போம். அவர்களின் நல்வாழ்வுக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிக்காது பாதுகாப்போம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...