கல்வித்துறையில் 'எமிஸ்' பதிவேற்றங்கள் குறித்த அவசர உத்தரவுகளால் காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மன உளைச்சலில் தவித்தனர். விருது ஆசையில் இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் சி.இ.ஓ.,க்கள் கடுமை காட்டுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளில் காலாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், வழங்கப்பட்ட இலவச நோட்டு புத்தகங்கள், வருகை பதிவு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் பதிவு உட்பட பிற வழக்கமான எமிஸ் பதிவுகளை மதியம் 1:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டது.
இப்பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் குறித்த விவரங்களை 'எமிஸ் டீம்' கல்வித்துறை வாட்ஸ்ஆப் தளத்தில் வெளியிட்டது. இதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதனால் முதல் நாளே கற்பித்தல் பணியை அப்படியே ஒதுக்கித் தள்ளிவைத்த ஆசிரியர்கள், அதிகாரிகள் கேட்கும் தகவல்களை பதிவேற்றம் செய்வதில் முனைப்பு காட்டினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: கற்பித்தல் பணியை பாதிக்கும் 'எமிஸ்' பதிவேற்றம் எண்ணிக்கை குறைக்கப்படும் என அமைச்சர் மகேஷ் உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளி திறந்த முதல் நாளிலே 'எமிஸ்' பதிவேற்றம் தொல்லை துவங்கி விட்டது.
எமிஸில் பதிவேற்றிய பின், குறிப்பாக மதிப்பெண் விவரப் பட்டியல் விபரங்களை டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கும் கூடுதலாக அனுப்ப வேண்டியுள்ளது.
அமைச்சர், செயலாளர் தலைமையில் நடக்கும் மண்டல ஆய்வுக் கூட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பரிசு, விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தேர்வுக்கு 'எமிஸ்' பதிவேற்றம் தான் பிரதானமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
விருதுக்காக சி.இ.ஓ.,க்கள் ஆசிரியர்களை விரட்டுகின்றனர். ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யும்போது 'எமிஸ்' தளமே முடங்கி விடுகிறது. அதோடு மல்லுக்கட்டுவதில் தினம் மனஉளைச்சலால் தவிக்கிறோம். மாணவர்களுக்கு பாடமும் நடத்த முடிவதில்லை. இப்பிரச்னைக்கு எப்போது தான் 'விடியல்' கிடைக்குமோ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...