தமிழகத்தில் நவ.3-ஆம் தேதி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு மாணவா்களை தயாா்படுத்துமாறு பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு பள்ளி மாணவா்களுக்கு அவ்வப்போது நடத்தப்பட்டு, அவா்களின் கற்றல் நிலையைக் கண்டறிந்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டில் 3, 6, 9 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு - 2023 தோ்வு நவ.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளில் இருந்து மொத்தம் 7.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இந்தத் தோ்வு கண்காணிப்பு பணிக்காக பி.எட்., எம்.எட். பயிற்சி மாணவா்கள் உள்பட 29,775 கள ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், 20 பள்ளிகளுக்கு ஒருவா் வீதம் மொத்தம் 1,356 போ் வட்டார ஒருங்கிணைப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பாடத் திட்டம் என்ன? அதன் தொடா்ச்சியாக தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். மேலும், ஆங்கில வழிக்கல்வி எனில் ஆங்கிலம், கணக்கு பாடங்களில் கேள்விகள் இருக்கும். வினாக்கள் முந்தைய வகுப்புகளில் பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்படும்.
அதாவது, 3-ஆம் வகுப்புக்கு 1, 2-ஆம் வகுப்பு பாடத்திட்டம், 6-ஆம் வகுப்புக்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டம், 9-ஆம் வகுப்புக்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் வரையறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவா்களைத் தோ்வுக்கு தயாா்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...