மதுரை மாநகராட்சி பள்ளிகள் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் டிஜிட்டல் வகுப்பறைகள், ரோபாட்டிக் ஆய்வகங்கள், நூலகங்கள் என்று தனியார் பள்ளிகளே வியந்து பார்க்கும் வகையில் உள்ளன.
ஆங்கிலக் கல்வி மோகத்தில் பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் காலம் இது. ஆனால், அதற்கு நேர்மாறாக மதுரை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி முறையில் நடந்த மாற்றங்களால், தற்போது பலர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். சில மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை முடிந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு 9, 10-வது, பிளஸ் 1, பிளஸ் 2-வில் அதிக மாணவர்கள் சேரத் தொடங்கி உள்ளனர்.
தனியார் பள்ளிகளே வியந்து பார்க்கும் வகையில், மதுரை மாநகராட்சி பள்ளிகளை பிரம்மாண்ட கட்டிடங்களுடன் டிஜிட்டல் வகுப்பறைகள், ரோபாட்டிக் ஆய்வகங்கள், நூலகங்கள் அமைத்து இதை சாத்தியப்படுத்தி உள்ளனர். மதுரை பனகல் சாலையில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 3 தளங்களுடன் கூடிய உயர்தர கட்டிட வடிவமைப்பே, குழந்தைகளை இங்கு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை பெற்றோரிடம் தூண்டி வருகிறது.
அதுபோல வகுப்பறைகளும், ஆய்வகங்களும் அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் கூட இல்லாத ‘ரோபாட்டிக்’ ஆய்வகம் எச்சிஎல் நிறுவன உதவியுடன் வெள்ளிவீதியார், ஈவேரா நாகம்மையார், திரு.வி.க. கஸ்தூரி பாய் காந்தி, பொன் முடியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய மாநகராட்சி பள்ளிகளில் ஏற்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை, மதுரை சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி குழந்தைகள் பள்ளியின் ஸ்மார்ட் போர்டு வழியாக நேரலையில் பார்க்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தனியார் பள்ளிகளையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இது குறித்து மாணவி ஷர்மிளா கூறியதாவது: டிஜிட்டல் வகுப்பறையில் உதாரணங்களை காட்டி கற்றுக் கொடுக்கின்றனர். இதனால் பாடங்களை புரிந்து படிக்க வசதியாக உள்ளது. கணினி ஆய்வகம், ஆசிரியர்கள் உள்ளதால் கணினி இயக்கவும், அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. தனியார் பள்ளிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி மேயர் இந்திராணி கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் 26 தொடக்கப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. குழந்தைகள் உற்சாகமாக படிக்க 15 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் (டிஜிட்டல் வகுப்பறைகள்) அமைத்துள்ளோம். தனியார் பள்ளிகளில்கூட, இதுபோன்ற டிஜிட்டல் வகுப்பறைகள் இல்லை. ஆனால், மாநகராட்சி பள்ளிகளில் புராஜக்டர் மூலம் டிஜிட்டல் திரைகளில் பாடம் கற்பிக்கின்றனர்.
திரு.வி.க., மாநகராட்சிப் பள்ளி, இளங்கோ மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளி, வெள்ளிவீதியார் பள்ளி, சோமசுந்தரம் பாரதி பள்ளி உள்பட 14 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்காக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் சங்க இலக்கியங்கள், வரலாற்று நூல்கள், பொது அறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நவீன கழிப் பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பல்வேறு வாழ்க்கை சிக்கலுடன், பெரும்பாலும் ஏழை மாணவர்களே மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க, உளவியல் நிபுணர்களை கொண்டு கவுன்சலிங்கும் வழங்கப்படுகிறது.
தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 43 பேருக்கு பரிசு, கேடயம் வழங்கினார். இதுபோல ஆண்டு விழா, விளையாட்டு விழா நடத்தி மாணவர்களுடைய தனித்திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...