15.08 .2023
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு...
இங்கு எல்லோரும் சமமென்பது .உறுதியாச்சு ....
வாள் கொண்டு போராடவில்லை வண்ண மைகொண்டு போராட்டக் களம் கண்டார் மகாகவி,சுதந்திர முழக்கமிட்டு சுடரொளியாக எட்டுத்திக்கும் எதிரொலிக்கச் சுதந்திரம் நிரந்தரமாகியதை அன்றே எண்ணி
" ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்"-- என்று பாடினார். அவர் தம் கனல் தெறிக்கும் கட்டுரைகள் மூலம் சுதந்திர வேட்கைக்கு வித்தூன்றி விருட்சமென படரச்செய்த பெருமை இதழ்களுக்கு உண்டு. இதழ்கள் என்பவை கருத்துகளையும், கொள்கைகளையும் பரப்பும் நிலையை மாற்றி ,விடுதலை வேட்கையும்,சுதந்திர உணர்வையும் எட்டுத்திக்கும் கொட்டும் முரசாக பயன்படுத்த பல ஆசிரியர்கள், அறிஞர்கள், புரட்சியாளர்கள்,எனப் பலரும் பயன்படுத்தும் களமாக இதழ்கள் இயங்கின.
ஆங்கிலேய அடிமைத்தளையை உடைத்தெறியும் ஊடகக் கருவியாக இவ்விதழ்கள் பயன்பட்டன. விடுதலை உணர்வையூட்டி தம் குறிகோளை பரப்பச்செய்யும் தளமாக் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர உணர்வுக்கு பேருதவியாக இருந்தது பத்திரிக்கைத்துறை. நாட்டைக் காக்கும் ஐந்தாம் படை இவ்வூடகங்கள் அல்லவா!. இவற்றை இயக்கும் ஆசிரியர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாயினர். துன்பம் பல கண்ட போதும் ,துவண்டு விடாமல் தாய்நாட்டைக் காக்க ,தன் இறுதிவரை உறுதிபூண்டனர்என்பது இன்று நெகிழ்ச்சியான உண்மையன்றோ! அவற்றிலிருந்து ஒரு சில இதழ்களின் வரலாற்றை நினைவு கொள்வோம்....
இந்தியா: (1906)
விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு என்பது தமது துணிச்சலான செயலால் வெகுண்டெழுந்து முன் ஏராகச் சென்று ,எழுச்சிமிக்க இளைஞர்களைத் தன் பின்னோடு தொடரச் செய்து விடுதலை விடியல் கண்டிட சூளுரைத்தவர், கவிஞர், ஆசிரியர்,கட்டுரையாளர்,பகுத்தறிவாளர் எனப் பன்முக தன்மை கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி 1906- ஆம் ஆண்டு மே - 9 ம் நாள் இந்தியா என்னும் இதழைத் தொடங்கினார். இந்தியா வார இதழ் சென்னையிலும்,பின்பு புதுச்சேரியிலும் வெளிவந்து இந்தியர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியது. விழிப்புணர்வை கூட்டியது. இவ்விதழில் செய்திகளும், கட்டுரை களும்,தலையங்கங்களும் மட்டுமன்றி, அரசியலை விமர்சிக்கும் விதமாகக் கேலிச்சித்திரங்களும் வெளிவந்தன. இவை அரசியல் விமர்சனம் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முதன்மையான நிலையில் இருந்தது. இது ஆங்கிலேயரை அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்தியா - இதழில் புறநானூற்று வழி தமிழக தாய்களின் வீரம் செறிந்த செயல்கள் பற்றியும், இந்திய விடுதலை வேட்கையும்,மேலைநாட்டு போர் முறைகளும் , இயக்கங்கள் பற்றிய செய்திகளும் வெளிவந்தன. இவை இந்திய இளைஞர்களை விடுதலை கனல்தகிக்கும் தீயென கொழுந்து விட்டெரிந்தன . இவற்றைக் கண்டு அச்சம் கொண்ட பிரிட்டஷ் அரசு இவ்விதழ் வளர்ச்சிக்குத் தடைவிதித்தது. அரசாங்கத்தின் அசுர அடக்குமுறையால் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்து இந்தியா.
தினமணி :(1934)
பாரதியாரின் இறப்பிற்குப் பிறகு சில ஆண்டுகள் கடந்த பின்பு 1934- ஆம் ஆண்டு செப்டம்பர் - 11- பாரதியின் நினைவு நாள் அன்று 'தினமணி ' இதழ் தொடங்கப்பட்டது. அதன் விலை அரையணா, பக்கங்களோ எட்டு. இதன் ஆசிரியர் விடுதலைப் போராளி டி.எஸ்.சொக்கலிக்கம் அவர்கள். தினமணி இதழில் சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பும் வகையில் கட்டுரைகளை எழுதியும், காந்தியக் கொள்கைகளில் ஈடுபாட்டுடனும் காணப்பட்டவர்.
இவ்விதம் தமிழ் மக்களின் நம்பிக்கை இதழாக தினமணிவளர்ச்சியடைந்தது.
இளம் இந்தியா : ( YOUNG INDIA- 1916)
இந்தியா என்றும் இளமையாக வளம்மிக்க செழிப்புடன் விளங்க வேண்டும் என்றும்,அந்நியரின் ஆதிக்க அதிகாரத்தை சிதைத்து துவைக்கும் வீரம் செறிந்து இளம் இந்தியாவாகவே திகழவேண்டி இப்பெயர் பெற்றிருக்கக் கூடுமோ,.. இளம் இந்தியா என்னும் இதழானது 1916- ஆம் ஆண்டு தொடங்ககப்பட்டது.பின்பு 1919 முதல் 1931 வரை மகாத்மா காந்தியால் வெளியிடப்பட்ட ஆங்கில வார இதழ் ஆகும்.இவ்விதழ் மூலம் காந்தி தமது சுதந்திர கொள்கையை பிரபலப்படுத்தினார். மகாத்மா தமது எழுத்துகளால் இளைஞர்களையும், நாட்டுப்பற்று உள்ளவர்களையும் ஊக்கப்படுத்தி ஒன்றிணைக்கும் முயற்சியைச் செவ்வனே செய்தார். இவ்விதமாக தமது தனித்துவமான சிந்தனைகளைப் பரப்பி ஐக்கிய அரசில் இருந்து இந்தியா சுதந்திரம்பெறுவதைக் கருத்தில் கொள்ளவும், திட்டமிடவும் இவ்விதழைப் பயன்படுத்திக்கொண்டார்.
தமிழ் முரசு:
அச்சகக் கோப்பாளராக இருந்த ம.பொ.சி.அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரராகவும்,சிலப்பதிகார ஈடுபாட்டாளராகவும் உடைய புலமை பெற்ற அறிஞர். இவரது சுதந்திரப் போராட்ட உணர்வை ஊட்டும் களமாக தமிழ்முரசு தளம் இருந்தது. வீரம் செறிந்த கட்டுரைகளை இவ்விதழ் வாயிலாக எழுதி இளைஞர்களுக்கு உரமூட்டினார். விடுதலை உணர்வேற்றினார்.மேலும் வீரபாண்டிய கட்ட பொம்மன், மற்றும் வ.உ.சி ஆகியோரை தமிழக மக்களுக்கு பத்திரிக்கை வாயிலாக அறிமுகப்படுத்தினார்.
வந்தே மாதரம் :
வந்தே மாதரம் என்பதன் பொருள் - தாய் மண்ணேஉன்னை வணங்குகிறேன் என்பதாகும்.இப்பாடல் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டும் பேராபத்து நிறைந்ததாக இருக்கும் இப்பாடலை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு ,பொது இடங்களில் பாட தடை விதித்தது .மீறியவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ரவீந்திர நாத் தாகூர் போன்ற அறிஞர்கள் பல பொது மேடைகளில் பாடினர்.லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து " வந்தே மாதரம் " என்ற பெயர் கொண்ட இதழைத் தொடங்கினார்.வந்தே மாதரம்
பாடலை எழுதிய" பங்கிம் சந்திர சட்டர்ஜி " இப்பாடல் பிரபலம் அடைவதை காண நான் இல்லாமல் போகலாம்,ஆனால் இப்பாடல் ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும் என நம்பிக்கைக் கொண்டார்.இப்பாடல் பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கவிஞர் எண்ணம் போலவே இப்பாடல் இன்றுவரை இந்தியரின் நாட்டுப்பற்று முழக்கமாகவே , முழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
பிரபலமானவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக பல பேர் நாட்டிற்காக தங்கள் செயல்,உழைப்பு,இன்னுயிர் ஆகியவற்றை ஈந்து அரும்பாடுபட்டவர்கள் வரலாறு நிறைந்து வீரம் பேசும் வேலை, இன்னும் இன்றும் வெளி உலகிற்கு தன்னைக் காட்டாமல் நமது விடுதலையே வெற்றியாகக் கொண்டு ,சுதந்திர போராட்டத்திற்கு உரமேற்றி ஊக்கம் தந்து ஊன்றுகோலாக, சான்றாக தமது சிந்தனைகளை ஒன்றிணைத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தம் சுவாசக் காற்றை துச்சமென எண்ணி, அச்சம் தவிர்த்து , மிச்சமாகக் கிடைத்ததை பத்திரிக்கையின் பாதையாக பயணித்து , ஆங்கில மொழியாலேயே பயமுறுத்தி பணிய வைத்து தம் உரிமையைப் பெற்றோம். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவரையும் போற்றுவது நமது கடமையாகும். சுதந்திரத்திற்காக பயன்படுத்திய நாள்,வார இதழ்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...