தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிறகு கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக பங்கேற்க, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், உடல்நல குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். மருத்துவ பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அமைச்சர் உடல் நலன் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மேல் வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . வலி நிவாரணத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...