இடை நிற்றலைத் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதத்தைக் கூட்டுதல், கற்றலில் சிக்கல் கொண்ட மாணவர்களின் திறன்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்தல், பெற்றோருடன் கலந்து ஆலோசித்துத் தீர்வு காண முயலுதல், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெறுமனே ‘ஆய்வு’ செய்தல், குறை கூறுதல், குற்றம் கண்டுபிடித்தல், கடிந்து கொள்ளுதல் என்கிற பாணியில் இருந்து முற்றிலும் மாறி களத்தில் இறங்கி, பள்ளித் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்களுடன் கைகோத்து, நேரடியாகப் பயன்தருகிற பணிகளை முன்னெடுப்பதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வகையில், மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்காக, ஜூலை 26 அன்று, பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘பள்ளிக் குழுக் கட்டமைப்பு’ கூட்டம் பயன் உள்ளதாய் இருந்தது.
இன்று தமிழக மாணவர்களிடம், குறிப்பாக அரசுப் பள்ளிகளில், நாம் காணும் கவலைக்குரிய அம்சம் – கற்றலில் ஆர்வம் இன்மை. சில புதிய முயற்சிகள் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க முடியும். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர், வகுப்பறையில் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே அமர்கிறார்கள். இந்த நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும், மாணவர்களை இடம் மாறி அமரச் செய்யலாம். வாரத்துக்கு ஒருமுறையேனும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தலாம். ‘புதிய இடம்’; ‘புதிய கோணம்’- மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.
எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என்று முறையாக அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வாறே வகுப்புகள் நடைபெறுகின்றன. இயந்திர கதியில் இயங்குகிற இந்த முறையில் சிறிய திருத்தம் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு வகுப்பேனும் ‘அட்டவணைக்கு உட்படாத’ வகுப்பாக அன்றன்று தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்தால் ஒரு ‘நிவாரணம்’ தருவதாய் இருக்கும்.
இதேபோன்று ஒவ்வொரு பாடத்துக்கும் (`சப்ஜெக்ட்’) குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் நடத்துவதில் இருந்துசற்றே மாற்றி, மாதம் ஒருமுறையேனும் அதே பள்ளியின் வேற்றுத் துறை ஆசிரியர் பாடம் எடுக்கலாம். உதாரணத்துக்கு, தமிழ் ஆசிரியர் - அறிவியல்; கணித ஆசிரியர் – ஆங்கிலம் என்று மாறிப் பாடம் எடுத்தால், ஆசிரியர்களுக்குப் புத்துணர்வு; மாணவர்களுக்குப் ‘புதிய பார்வை’ கிட்டும். யோசித்துப் பாருங்களேன்….. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் பற்றிப் பேசினால்…. ஆங்கில ஆசிரியர் கம்பராமாயணம் வகுப்பு எடுத்தால்..? மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அப்போதே தூண்டிவிடும். அல்லவா? சோதனை முயற்சிதான்; ஏன் முயற்சிக்கக் கூடாது.? ஒரு பாடம் முடிந்தவுடன் கையோடு அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது மாதிரித் தேர்வு நடத்தி, அப்போதே மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யலாம்.
இயன்றவரை மாதம் ஒரு நாளேனும் மாணவ, மாணவியரில் இருந்து ஒருவரை அழைத்து. நடத்தி முடித்த பாடத்தைப் பிறருக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுமாறு பணிக்கலாம். அவ்வப்போது மாணவரிடம் இருந்து யாரேனும் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுகிற முறை குறித்து பின்னூட்டம் தரச் சொல்லி வாய்ப்பு தரலாம். பல சமயங்களில் மாணவரின் கருத்துகளில் உள்ள நியாயத்தை, பெற்றோர் உட்பட யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்தக் குறை நீக்கப்பட வேண்டும்.
ஒரு மாணவி அல்லது மாணவனின் தனித்திறனை, அவ்வந்த வகுப்புகளில் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து மனதாரப் பாராட்ட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு மாணவி நன்றாகப் பாடுகிறார் என்றால், கால இடைவெளியில், தனது வகுப்பில் அவ்வப்போது பாட வாய்ப்பு கொடுத்து வாழ்த்தினால் எப்படி இருக்கும்..? பள்ளிப் போட்டிகளில் கலந்து கொண்டு வென்றால் கிடைக்கிற பரிசுகளை விட இது மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வகுப்புக்கு வரத் தூண்டும்.
வகுப்புகளில் அவ்வப்போது மாணவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் ‘வேலை’ தந்து கொண்டே இருக்க வேண்டும். எழுந்திருக்க, இடம் மாறி அமர்ந்து கொள்ள, வகுப்புக்குள் நடக்க, குதிக்க…ஏதேனும் ‘உடல் அசைவு’ அவசியம் ஆகும். இதே போன்று, மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகப் புதிர்கள், வினாடி - வினா போன்ற பயிற்சிகள் வகுப்பு நேரத்தை சுவாரஸ்யம் ஆக்கும்.
இவையெல்லாம் விட மிக முக்கியமானது – யாரெல்லாம் தவறாமல் எல்லா நாளும் பள்ளிக்கு வந்து 100% வருகை புரிகிறார்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு மாத முடிவிலும் ஊக்கப் பரிசு வழங்க வேண்டும். கல்வியாண்டு முடிவில் பரிசு தந்து என்ன பயன்..? மாதந்தோறும் ஊக்கப் பரிசு – அதுவும், ‘வீட்டுக்கு’ பயன் தருகிற விதத்தில் கிண்ணம், மின்னணுப் பொருட்கள், ஏன்… அரிசி பருப்பாகக் கூட இருக்கலாம். வழங்கினால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில், வறிய நிலையில் உள்ள பெற்றோருக்கும் ஆர்வம் கூடும். அதிக நிதிச் செலவு இல்லாமலே இதனை நிறைவேற்ற முடியும். நூறு சதவீத வருகையை உறுதிப்படுத்தும் மிக நல்ல திட்டமாக இது விளங்கும். இதை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்கலாம்.
நிறைவாக, கல்வி நிலையங்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும். தனித்தனியே ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று இருக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ‘ஆரோக்கியமான’ சமுதாயம் உருவாகும். வரும் ஆண்டில் முதல் வகுப்பில் தொடங்கினாலும் அடுத்த 12 ஆண்டுகளில் எல்லா பள்ளிகளுமே பொதுப் பள்ளிகளாக மாறி விடும். தமிழ்நாடு அரசு இதனைக் கொள்கை முடிவாக அறிவித்தால், பாலினப் பாகுபாடு இல்லாத பள்ளிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு மிளிரும். நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் ‘தமிழ்நாடு மாடல்’ பின்பற்றப்படும். அப்போது, இன்று நாம் காணும் அல்லது கேள்விப்படும் ‘பல பிரச்சினைகள்’ தானாக மறைந்து போகும். சரிதானே..?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...