ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் எனக் கூறப்படுவதுண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும் மாதங்கள்.
பீடை அல்ல பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம் என்கிறோம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் அந்த மாதம் முழுவதும் வீட்டில் எந்தச் சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.
ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதங்கள் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன் மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர்.
மேலும், ஆடி மாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல் சீற்றமும் ஏற்படும். அதிக காற்று வீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம் கிரக பிரவேசம் போன்றவற்றைச் செய்வதில்லை.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்புப் பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...