சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர தலைமையாசிரியர் தன் சொந்த பணத்தில் வேன் வழங்கியுள்ளார்.
மல்லாக்கோட்டை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன் பால்துரை. இவர், 2013ல் இப்பள்ளிக்கு வந்த போது, 8 பேர் மட்டுமே படித்த நிலையில், பல போராட்டங்களுக்கு பின் மாணவர் எண்ணிக்கையை 93 ஆக உயர்த்தினார்.
தன் சொந்த செலவில், மூன்று ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து பணியமர்த்தி, பாடம் நடத்தி வருகிறார். உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் பள்ளியில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தி, ஸ்மார்ட் வகுப்பறையையும் நிறுவியுள்ளார்.
தற்போது, பள்ளிக்கு துாரத்திலுள்ள மாணவர்களை அழைத்து வர தன் சொந்த செலவில் வேன் வாங்கி பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
காலை, மாலை தானே வேனை ஓட்டிச்சென்று மாணவர்களை அழைத்து வந்து விடுகிறார்.
தலைமை ஆசிரியர் பொன் பால்துரை கூறியதாவது:
ஆரம்பத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் அரசு பள்ளியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அனைவரையும் பள்ளியில் சேர்க்க வைத்தோம். கூடுதல் ஆசிரியர்கள் இருந்தால்தான் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்போம் என்று கூறியதால் மூன்று ஆசிரியர்களை நியமித்து சம்பளம் கொடுக்கிறோம்.
கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகின்றனர். அது எங்களுக்கு துாண்டுதலாக அமைந்துள்ளது. பள்ளியிலிருந்து, 3 கி.மீ.,க்கு அப்பால் இருப்பதால் ஓடைப்பட்டி கிராம மாணவர்கள் பள்ளிக்கு வரத் தயங்கினர்.
பெற்றோர் காலை நேரத்தில் வேலைக்கு சென்று விடுவதால், அவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும் அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை. அவர்களுக்காகவே என் சொந்த பணத்தில் ஒரு வேன் வாங்கி, நானே காலை, மாலையும் சென்று அழைத்து வந்து விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...