நீரிழிவு பாதிப்புடைய மாணவர்களுக்கு பள்ளிகளில் தகுந்த வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; இந்தியாவில் அதிக குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் நீரிழிவு வகை-1குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தினமும் இன்சுலின் ஊசி செலுத்துதல் உட்பட சிகிச்சை எடுக்க வேண்டியநிலை இருப்பதாக பன்னாட்டு டயாபெடிஸ் அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் நீரிழிவு குறைபாடுடைய மாணவர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை பள்ளியில் செலவிடுகின்றனர். அதை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் காக்க பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தல், இன்சுலின் எடுத்து கொள்ளுதல் போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்படும். எனவே, இத்தகைய மாணவர்கள் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்வு மற்றும் பள்ளி நேரங்களில் வகுப்பாசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்.
நீரிழிவு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாத்திரைகள், பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதிக்க வேண்டும். ஸ்மார்ட் போன் மூலம் ரத்த சர்க்கரை அளவீடுகள் மேற்கொண்டால், தேர்வின்போது மாணவர்களின் செல்போனை அறையின் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து குளுக்கோஸ் அளவை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி நீரிழிவு பாதிப்புடைய மாணவர்கள் நலனுக்கு ஏதுவான வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுசார்ந்து அனைத்துவித பள்ளிதலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...