புதிய தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்க, நாடு முழுதும் உள்ள பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து, 300 மாணவர்களை துாதர்களாக நியமிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020ல் அறிவித்தது. இதற்கு, பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்கவும், அதன் அமலாக்கத்தை மேம்படுத்தவும், நாடு முழுதும் உள்ள பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து, 300 மாணவர்களை துாதர்களாக நியமிக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, யு.ஜி.சி., தலைவர் எம்.ஜக்தீஷ் குமார் நேற்று கூறியதாவது: கல்வி முறையில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. இதை கருதி, மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், உயர் கல்வி அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'மாணவர் துாதர்' என்ற புதிய முயற்சியை யு.ஜி.சி., துவக்குகிறது.

இத்திட்டத்தின்படி, பல்கலை துணைவேந்தர்கள், கல்லுாரி முதல்வர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், தங்கள் கல்லுாரியில் படிக்கும் மூன்று மாணவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் மாணவர்கள், சிறந்த ஆளுமை, சிறந்த தகவல் தொடர்பு திறன், படைப்பாற்றல், பொறுப்புணர்வு ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். இதிலிருந்து, 300 மாணவர்களை யு.ஜி.சி., தேர்வு செய்யும். அவர்கள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மாணவர் துாதர்களாக செயல்படுவர்.
புதிய கல்விக் கொள்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக ஊடகங்களில் அதன் சிறப்பை ஊக்குவித்தல், அது தொடர்பான மாணவர்களின் கருத்துகளை சேகரித்தல், அவர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை இந்த துாதர்கள் மேற்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...