முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முந்தைய பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2017-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தவறான வினா -விடை இடம்பெற்றதாகவும், அதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரியும் சிலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட 4 வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அவர்களை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில் பரணி என்பவரிடம் கோரிக்கை ஏற்கபடவில்லை. இதனால் பரணி சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு எனக்கும் பொருந்தும். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதாசுமந்த், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தரப்பில் தாங்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 2019-ல் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. தற்போது அந்த உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் விரும்பவில்லை. அதில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஏன் தாமதம் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், ஆஜராக வேண்டிய நாளுக்கு முதல் நாள் விலக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இது வழக்குக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்காதது தெரிகிறது. இதனால், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு போலீஸாரை வைத்து ஆஜர்படுத்த நேரிடும்'' என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...