மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் ரூ.1000 பெறும் பெண்களின் தகுதி பட்டியலையும் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன என்பதை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
* குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளை பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பொது விநியோக நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.
குடும்பத்தலைவி வரையறை
* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர்.
* ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
* குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
* திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர்.
* ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.
பொருளாதார தகுதிகள்
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
* ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
* பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று அல்லது நில ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள்
* ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
* மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களை தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
* சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
* ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
* ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
* மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* விதிவிலக்குகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவை. இந்த வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...