பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவோருக்கு மேல்நிலைக் கல்வி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி (ஐடிஐ) படிப்புகள் என 3 வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் மேல்நிலைக் கல்வியிலேயே (பிளஸ் 1, பிளஸ் 2) சேர்க்கின்றனர். இதை தேர்வு செய்வது தவறு அல்ல. ஆனாலும், பிள்ளைகளின் கற்கும் திறன், ஆர்வத்தை கருத்தில் கொண்டு பெற்றோர் அதை தீர்மானிப்பது இல்லை என்பதே வருத்தமான விஷயம்.
கல்வி என்பது கருத்தியல், செய்முறை என்ற 2 அம்சங்களை உள்ளடக்கியது. இதில் கருத்தியல் பாடங்களை படிப்பதில் ஆர்வம் உள்ள பிள்ளைகளை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கலாம். அதேபோல, செய்முறை பாடங்களை விரும்புவோரை பாலிடெக்னிக் (டிப்ளமா), ஐடிஐ படிப்புகளில் சேர்ப்பதே சிறந்தது.
பல பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல் கருத்தியல் முறை பாடங்களை படிக்க கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மேல்நிலைக் கல்வியில் அவர்களால் திறம்பட செயல்பட முடியாத நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், டிப்ளமா படிப்புகளின் சிறப்பு அம்சங்களை 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பெற்றோர் கருத்தில் கொள்வது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகக் கல்வி பயிலகத்தின் முதல்வர் கா.முத்துக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் 54 அரசு, 34 அரசு உதவி மற்றும் 412 தனியார் என 500 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. அரசு பாலிடெக்னிக்குகளில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2,500-க்கும் குறைவு. மேலும், இலவச பேருந்து பாஸ், லேப்டாப், புத்தகங்கள், நேரடி தொழிற்பயிற்சி (Internship), கல்வி உதவித் தொகை என பல்வேறு சலுகைகளும் உண்டு. அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை, எஸ்சி/ எஸ்டி உதவித் தொகை ஆகியவையும் வழங்கப்படுகிறது.
அதேபோல, ‘தொழில்மயம் 4.0’ திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுவதால், பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதும் எளிது. குறிப்பாக, அரசு பாலிடெக்னிக்கில் படிப்பவர்களில் 85 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படுகிறது. இதுதவிர, டிப்ளமா முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பொறியியல் படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்து உயர்கல்வியை தொடரலாம். தமிழ் வழியில் பாலிடெக்னிக் படித்தவர்கள் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு மூலம் எளிதில் அரசுப் பணியை பெற முடியும்.
இது மட்டுமின்றி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் அனைத்தும் ரூ.2,753 கோடி செலவில் திறன்மிகு உயர் கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதன்மூலம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் புதிய இயந்திரங்களை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவி மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால், மாணவர்கள் தொழில் துறையின் தேவைக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.
10-ம் வகுப்பு முடித்த அடுத்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, சுயதொழில், உயர்கல்வி என பல்வேறு சாதக அம்சங்கள் உள்ள டிப்ளமா படிப்புகளை பெற்றோர், மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நடப்பு ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதியுடன் முடிகிறது. ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் https://tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...