கடந்த பத்தாண்டுகளில் மருத்துவச் செலவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. பல்வேறு வகைப்பட்ட பெருவணிக நிறுவனங்கள் சார்ந்த மற்றும் தனியார் மருந்தகங்கள் தேநீர் கடைகள் போல் பல்கிப் பெருகி வருவது ஆரோக்கியம் கிடையாது. ஒன்றிய அரசின் தலைசிறந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுள் ஒன்றாக விளங்கும் மிகக் குறைந்த விலையில் சேவை செய்யும் மக்கள் மருந்தகங்களில் உணவுப் பொட்டலங்கள் போன்று மாத்திரை மருந்துகளை மூட்டைக்கட்டி எடுத்துச் செல்வது வேதனையளிப்பதாக உள்ளது.
அனைவரும் கல்வி தேடியும் மருத்துவம் நாடியும் அலைந்து திரிய தொடங்கிவிட்டது தான் இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் மனித ஆக்கப் பேரிடராகத் திகழ்கிறது. இதற்கு தம் மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் ஆசிரியப் பெருமக்கள் விதிவிலக்கினர் அல்லர். கூடுதல் பணிச்சுமை, மன நெருக்கடிகள், எப்போதும் ஒருவித பதட்ட நிலையிலிருத்தல், தாம் மேற்கொள்ளும் பணியில் முழு திருப்தியின்மை, மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்க வழக்கம் காரணமாக இருபால் ஆசிரியர் பெருமக்களும் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் சார்ந்து பலவித இன்னல்களுக்கு இவர்கள் ஆளாகித் தவித்து வருகின்றனர். எல்லா விதமான பிடித்தங்கள் போகக் கிடைக்கும் மாத ஊதியத்தில் வங்கி வீட்டுக்கடன் தவணையாக பாதி போக எஞ்சிய ஒரு பகுதியின் பெரும் தொகையில் அன்றாட மருத்துவச் செலவை ஈடுகட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதைத் தவிர அரசு வழங்கியிருக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலமாக வேறு வழியின்றிக் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் ஆகும் செலவில் 40 முதல் 50 விழுக்காடு கழிவு போக மிச்சத்தை ரொக்கமாகக் கொட்டி அழும் நிலை உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவர்களுள் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே விழிப்புணர்ச்சியுடன் தாம் சார்ந்த ஆசிரியர் இயக்க முன்னோடிகள் மூலமாக தரும் தொடர் அழுத்தம் காரணமாகச் சற்று கூடுதல் கழிவை நிவாரணமாகப் பெற்று பெருமூச்சு விடும் அவலம் கனிவுடன் அவசியம் திருத்தியெழுதப்படுதல் என்பது இன்றியமையாதது. இந்த மருத்துவக் காப்பீடு மூலமாக ஆசிரியர்கள் தாம் மேற்கொள்ளும் அறுவை மற்றும் பெரிய சிகிச்சைகள் அனைத்திற்கும் முழு கட்டண விலக்குப் பெற தமிழ்நாடு அரசு உதவிடுதல் நல்லது.
இத்தகைய சூழலில், புற்றுநோய் பீடிக்கப்பட்டு எளிதில் குணப்படுத்தும் நிலையைக் கடந்து அபாய கட்டத்தில் உள்ள இருபால் ஆசிரியர் பெருமக்கள் உலகளவில் உயர்தர புற்றுநோய் சிகிச்சைக்குப் பெயர் போன சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதக்கணக்கில் தங்கித் தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு, அங்கு சுற்றிலும் காணப்படும் தனியார் வசமுள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் மற்றும் சமையல் வசதி கொண்ட வணிக வீடுகள் ஆகியவற்றிற்கு நாள் மற்றும் மாத வாடகையாக ஆயிரக்கணக்கில் ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கிறது அறியத்தக்கது.
ஏற்கெனவே குடியிருக்கும் வாடகை வீட்டில் தம் ஒன்றிரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை வயதான மாமனார் மற்றும் மாமியாராகிய தக்க பாதுகாவலர்களிடமோ, மிகவும் வேண்டப்பட்ட உறவினர்களிடமோ வேறு வழியின்றி விட்டு விட்டு கண்ணீர் ததும்ப வருபவர்கள் மேலும் ஒரு கூடுதல் பணச்சுமையை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படும் சூழல் உள்ளது.
அதாவது, சற்றேறக்குறைய ஆறு மாதங்களுக்கு மேலாக வெளியில் தங்கி உரிய உகந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்பின் முகமறியா மண்ணில் இதையே வணிக நோக்காக எண்ணிச் செயல்படும் வீடு அல்லது அறை வாடகை உரிமையாளர்களிடத்துக் குடும்பமாக நோயுடன் சேர்ந்து போராடும் கொடுமை துயரம் மிக்கதாகும். அநியாயமாகக் கோரப்படும் வாடகையைத் தொடர்ந்து தருவதற்கும் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புற்றுநோய்க் கட்டி அழிப்பு மற்றும் கிருமி ஒழிப்பு ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் மூன்று நாள்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி கீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைக்குரிய கட்டணம் செலுத்துவதற்கும் உயிர் அடங்கி உயிர் வந்து விடுகிறது என்பது மிகையாகாது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் இதுபோன்ற அதிகப்படியான செலவினத்தை ஈடுகட்டும் பொருட்டு பழைய ஓய்வூதியதாரர்களுக்குத் தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஆசிரியர் சேமநல வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஒரு பகுதியைத் தற்காலிக முன்பணக்கடனாகவோ, பகுதி இறுதித் தொகையாகவோ அரசிடமிருந்து கோரிப் பெறுவதற்கு வழியின்றித் தவிக்கும் நிலையைச் சம்பந்தப்பட்டவர்கள் உணருதல் நல்லது. கிணற்றுக்குள் கிடக்கும் கல்லாக இவர்கள் மாதந்தோறும் அரசின் அறிவுறுத்தலில் சேமிக்கும் சந்தா தொகையுடன் அரசின் பங்களிப்புத் தொகையும் அவற்றிற்குரிய வட்டியுடன் உரிய காலத்தில் உயிர் போகும் சமயத்தில் கூட மீளப் பெற்று திரும்ப அடைக்க இயலாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
இக்காலக் கட்டத்தில் இவர்கள் தம் நியாயமான பணத்தேவைகளுக்காகப் படும் இன்னல்கள் சொல்லவொணாதவை. கற்சிலையும் கரைந்து விடும். பெருங்கடலும் கண்ணீர் சொரியும். தம் இன்னுயிரைக் காக்கவும் மீட்கவும் இந்நோயாளிகள் மேற்குறிப்பிட்ட செலவினங்களுக்காகத் தம் உடைமைகள் அனைத்தையும் பறிகொடுக்கும் நிலைக்கு ஆட்பட்டு வருவது எண்ணத்தக்கது. இவர்களது கண்ணீரின் முன்பாக ஆயிரம் சட்டச் சிக்கல்கள் முட்டுக்கட்டைகளாக முன் நின்றாலும் மனிதாபிமான அடிப்படையில் தார்மீகக் கடமை ஆற்றவேண்டிய நிலையில் அரசும் கல்வித்துறையும் உள்ளது மறுப்பதற்கில்லை.
இதுபோன்று உயிருக்குப் போராடும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் தம் துணையுடன் தங்கி சிகிச்சை பெற அடையாறு மருத்துவமனைக்கு எளிதில் வந்து செல்ல, சற்று அண்மையில் உள்ள சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் இல்லத்தில் முழு கட்டண விலக்குடன் மருத்துவர் ஆலோசனையின் பேரில் நிபந்தனைகள் ஏதுமின்றித் தொடர்ந்து தங்கியிருக்க கல்வித்துறை வட்டாரங்கள் பெரிய மனத்துடன் இத்தகையோருக்குச் சலுகை வழங்கி உதவிட முன்வர வேண்டும். இந்த மனிதாபிமான மிக்க வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதில் ஓர் அழகிய குடும்பமே நிலைகுலைந்து கையறு நிலையில் நிற்கும் பேரிடரில் ஆற்றும் இதுபோன்ற பேருதவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்குக் காலத்தில் கிடைக்கப் பெற்றால் மிகுந்த நன்றிப்பெருக்குடன் இருள் சூழ்ந்த வாழ்வில் முற்றிலுமாக இழந்த தன்னம்பிக்கை உணர்வைத் திரும்பப் பெற்று மேலோங்கிப் புத்துயிர் பெறுவார்கள் என்பது நிச்சயம். வாழ்வளிக்க வேண்டும் இந்த எல்லோருக்குமான நம்பிக்கை ஊட்டும் விடியல் அரசு!
எழுத்தாளர் மணி கணேசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...