அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ. 33.56 கோடி செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் கிடைத்த வெற்றியைத் தொடா்ந்து, வரும் கல்வியாண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வா் ஆலோசனை: காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா உள்ளிட்ட அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
திட்டத்தால் விளைந்த நன்மைகள், விரிவாக்கத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து சிறப்புப் பணி அலுவலா் இளம்பகவத் விளக்கம் அளித்தாா். விரிவாக்கத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...