குழப்பம் தொடர்வதால், ஆசிரியர்களின் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் தேதி, மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும், 2023 - 24ம் கல்வி ஆண்டுக்கான விருப்ப இடமாறுதல், கடந்த 8ம் தேதி துவங்குவதாக இருந்தது.
ஆனால், கவுன்சிலிங் விதிகளில் மாற்றம் வேண்டுமென, பல்வேறு ஆசிரியர்களும், சங்கத்தினரும் கோரிக்கை விடுத்ததால், 15ம் தேதிக்கு கவுன்சிலிங் அட்டவணை மாற்றப்பட்டது.
தொடர்ந்து கவுன்சிலிங் துவங்கிய நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் என்ற கட்டாய இடமாறுதல் வழங்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாறுதல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கவுன்சிலிங்கால் வேறு மாவட்டங்களுக்கு அல்லது வேறு பகுதிகளுக்கு இடமாறுதல் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர், பள்ளிக் கல்வியின் விதிகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று நடக்கவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாற்றமும் நிறுத்தப்பட்டது.
மூன்றாவதாக புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் 29ம் தேதிக்குள் இடைநிலை, தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், திட்டமிட்டபடி கவுன்சிலிங் நடக்குமா அல்லது மீண்டும் பிரச்னை எழுமா என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வெல்
ReplyDelete