ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மற்றும் ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் விவரம்:
ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மற்றும், ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்கள் அமைக்கப்படும்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.10 கோடியில் 28 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் புதிய வகுப்பறைகளுக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.
ரூ. 68.55 கோடியில் 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் (MIT Campus) மாணாக்கர்களின் தேவைக்கேற்ப ரூ.5.87 கோடியில் கூடுதல் உணவுக்கூடம் அமைக்கப்படும்.
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.180 கோடியில் அரசு கல்லூரிகளில்
உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதிகளில் இணைய வசதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் 250 மாணவிகள் தங்கும் வகையில் மாணவிகளுக்கு விடுதி கட்டடம் கட்டப்படும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் ரூ. 15.51 கோடியில் புதிய கல்விக் கட்டடம் (New Academic Block) கட்டப்படும்.
ரூ. 150 கோடியில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க நிறுவப்படும்.
மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...