கற்பித்தல்
என்ற செங்கோண முக்கோணத்தில் மூன்று பக்கங்களாக வகுப்பறை, ஆசிரியர்,
மாணவர்கள் ஆகியோர் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இதில் கர்ணம் என்ற
அளவாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனால்தான் வகுப்பறை என்ற அடிப்பக்கத்தில் மட்டுமல்ல வாழ்க்கை என்ற
அடிப்பக்கத்திலும் 90 டிகிரி கோணத்திற்கு மாணவர்கள் நிமிர்ந்து
நிற்கிறார்கள்
இன்றைய
சூழலில் வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையில் முழு சுதந்திரம்
இருக்கிறதா என்று சற்றே சிந்தித்தோம் என்றால் அது முழுமையாக இல்லை என்பதை
நடைமுறை உணர்த்துகிறது.
கொரோனா
பெருந் தொற்றால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அது
இட்டு நிரப்ப வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. கற்றல் இடைவெளி பெரும்பாலும்
பாதித்தது தொடக்கப்பள்ளி மாணவர்களையே
ஆனால்
அதற்காக ஒரே அடியாக அந்த இடைவெளியை நிரப்பி விட முடியுமா?? நேற்றைய
பசிக்கும் சேர்த்து இன்று அதிக உணவு சாப்பிட முடியுமோ???!!
எண்ணும்
எழுத்தும் திட்டம் மாணவர்களின் கற்றல் இடைவெளியை மீட்டெடுக்க
புகுத்தப்பட்ட அற்புதமான திட்டம். மாணவர்களை ஆடல் பாடலுடன் இழந்ததை
மீட்டெடுக்க இனிமையாக கற்க வாய்ப்பாக அமைந்த திட்டம் என்று சொன்னால் மிகை
இல்லை. ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட கருத்து கேட்பிற்கு பிறகு ஒவ்வொரு
பருவத்திலும் வெவ்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது நன்மைதான்
எண்ணும்
எழுத்தும் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகள் அப்படியே ஆசிரியர்களால்
பயிற்றுவிக்கப்பட்டு கருத்துகள் மாணவர்களிடம் சென்று சேர்வது சிறப்பு
என்றாலும் ஆசிரியர்களுக்கு தன் வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு இதைவிட
எளிமையான வேறொரு செயல்பாடு மூலம் கற்றல் விளைவுகளை கொண்டு சேர்க்கும்
சுதந்திரம் அவசியம் அல்லவா??
கல்வியாளர்கள்
சொல்வது போல் என்னென்ன கற்பிக்கப்பட வேண்டும் என்கிற கலைத்திட்டம்
வேண்டுமென்றால் இருக்கலாமே தவிர அதை இப்படித்தான் கற்பிக்க வேண்டும் என்பது
ஆசிரியரின் வகுப்பறை சுதந்திரத்தை பாதிப்பது போல் அல்லவா இருக்கிறது??
வழிகாட்டுதல்களுக்காக சில செயல்பாடுகள் தரப்படலாமே தவிர இது மட்டுமே வழி என்பது வகுப்பறையை உயிர் இல்லாத சூழலாக உருவாக்கி விடும்
மேலும்
கோரஸ் முறை என்பது ஒரு குற்றம்போல் பாவிக்கப்படுகிறது. ஆனால் அறிவியல்
பூர்வமான உண்மையோ வேறொன்றை சொல்கிறது. எழுத்துக்களுக்கு எந்த அர்த்தமும்
கிடையாது. அதை மந்திரம் போல் மனப்பாடம் செய்ய வேண்டும் அவ்வளவே. தினசரி ஒரு
வார்த்தை என்கிற விதத்தில் பத்து நாள், பத்து வார்த்தை படிப்பதை விட
ஒவ்வொரு நாளும் அதே பத்து வார்த்தையை திரும்பத் திரும்ப படிப்பதே அதிக பலன்
தருகிறது. ஆகவே எண்ணும் எழுத்தும் முறையில் இதற்கும் சிறிது
முக்கியத்துவம் தரலாம்
மேலும்
நான்கு வரி, இரட்டை வரி போன்றவை எழுத போதுமான நேரம் தரப்பட வேண்டும்.
வகுப்பறைக்குள் மட்டும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது
வகுப்பறைக்கு வெளியிலேயும் விளையாட போதிய அளவில் கால அட்டவணையில் மாற்றம்
வேண்டும்
ஆகவே கொரோனா
பெரும் தொற்றுக்குப் பிறகு ஒரு கல்வி ஆண்டு முழுதும் நடந்து முடிந்து
அடுத்த கல்வியாண்டு சிறப்பாக ஆரம்பிக்கப் போகிறது. இந்தக் கல்வி ஆண்டில்
ஆசிரியர்கள் பெரும் வீச்சுடன் முழு சுதந்திரத்துடன் கற்பித்தலை அணுகி வெகு
விரைவாக கற்றல் இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டும்
அதற்கான
வாய்ப்பினை எப்போதும் செய்வது போல் இந்த கல்வி ஆண்டிலும் கல்வித்துறை
சிறப்பாக செய்யும் என்று நம்பிக்கையோடு காலடி எடுத்து வைப்போம்
ஏனெனில்
ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரமே மாணவர்களை நிமிர்ந்து நிற்க வைக்கும்
கர்ணமாக இருக்கிறது. வாருங்கள் கற்பித்தலை சுதந்திரமாக இனிமையாக்குவோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...