சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனும் மெய்நிகர் உண்மை அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கும் பணியில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் மாதிரிகளை, 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்வதாகும்.
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி முறையானது, மாணவர்களுக்கு அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை வழங்கும். அதனுடன், மாணவர்கள் புரிந்து படிக்கவும் வழி செய்யும்.
அதேபோல், தொழில்நுட்பங்கள் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டால், மாணவர்களின் கற்றல் வலுப்பெறும்.
மேலும், மாணவர்கள் உயர் கல்விக்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். இதன் வாயிலாக, நேரடி வகுப்பறைகளில் உள்ள சிரமங்கள் களையப்படும்.
இதன் துவக்கமாக, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெரின் சிமிராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோர் 'மெமரிபைட்ஸ்' எனும் மொபைல் போன் செயலியை உருவாக்கிஉள்ளனர்.
இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் செயல்படக்கூடியது. அனைத்து நாடுகளிலும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல் எனும், ஐ.நா., சபையின் இலக்கை அடைய, இந்த திட்டம் உதவும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரலாறு, மொழிப் பாடங்கள், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவிக்கலாம்.
இந்த திட்டம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடையே நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை இணைக்கும் பாலமாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...