மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் தொடங்குகிறது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமா படிப்புகளில் தமிழகத்தில் சுமார் 4,200 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 42,500 இடங்கள் உள்ளன.
முதுநிலை நீட் (NEET - PG) தேர்வில் தகுதி பெறுவோரைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
இந்நிலையில், 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த 5-ம்தேதி ஆன்லைனில் நடந்தது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்படநாடு முழுவதும் 2.09 லட்சம் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள் https://www.natboard.edu.in மற்றும் https://nbe.edu.in ஆகிய இணையதளங்களில் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டன. 800 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 291 மதிப்பெண், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 725 மதிப்பெண் பெற்று டெல்லி பெண் மருத்துவர் ஆருஷி நர்வானி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய சுகாதார சேவைக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது. 2023-24-ம்கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/#/home என்ற இணையதளத்தில் சில நாட்களில் தொடங்கஉள்ளது.
அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்த உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...