காஞ்சிபுரத்திலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014ம் ஆண்டு கடற்கரை தூய்மை பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். மாமல்லபுரம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதனகோபால் என்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி கடலில் குதித்ததால் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.
தனது மகனின் மரணத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த மாணவரின் தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் தரப்பில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக எவ்வித தகவலும் தரவில்லை எனவும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் தகுந்த பாதுகாப்பை செய்திருப்போம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருப்போம் என தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி தரப்பில் மாணவர்கள் யாரும் கடலில் இறங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் 2 மாணவர்கள் குளித்தபோது அதில் மதனகோபால் என்ற மாணவரை காப்பாற்ற இயலவில்லை. இதற்காக கல்லூரியை பொறுப்பாக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிபதி உத்தரவில், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால் மாணவர் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
மாணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரி சுற்றுலா நிகழ்ச்சிகளை நடத்தும்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...