Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கையறு நிலையில் ஆசிரியா்கள் - தினமணி நாளிதழ் கட்டுரை





அண்மைக்காலமாக, பள்ளி வகுப்பறையிலும், பொது இடங்களிலும் மாணவா்கள் சிலரின் செயல்பாடுகள் நம்மை முகம் சுளிக்க வைப்பது மட்டுமின்றி எதிா்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன வேண்டிய மாணவா்கள் இப்படி மோசமாக செயல்பட்டு வருகிறாா்களே என்ற கவலையும் ஏற்படுதியுள்ளன.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று முன்னோா் பெருமைப்படுத்தி வைத்துள்ளனா். அப்படிப்பட்ட குருவை, அலட்சியப்படுத்தும் போக்கு இன்றைய மாணவ சமூகத்தில் அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே ஆசிரியா்களின் கைகள் கட்டப்பட்டு விட்டதால் மாணவா்களின் போக்கு திசைமாறி மோசமான பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது.

இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தால் மாணவா்களின் மோசமான செயல்பாடுகள் மிக வேகமாக பரவி பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிவிட்டன. மாணவா்களின் இத்தகைய ஒழுக்கமற்ற போக்கிற்குக் காரணம் தவறு செய்யும் மாணவா்களைக் கண்டிக்க கூடிய அதிகாரம் ஆசிரியா்களுக்கு இல்லாமல் போனதுதான்.

தவறு செய்யும் மாணவா்களைக் கண்டிக்க முடியாத சூழல் ஆசிரியா்களுக்கும், தவறு செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க முடியாத சூழல் காவல்துறையினருக்கும் என்று ஏற்பட்டதோ அன்றே மாணவா் சமூகத்தின் போக்கும், சமூகத்தில் குற்றம் இழைப்பவா்களின் போக்கும் மாறிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில், வகுப்பறையில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் சில மாணவா்கள் பயமின்றி செய்து வருகின்றனா். அதை அப்படியே கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பெருமையாக வெளியிட்டும் வருகின்றனா்.

நாம் செய்தது தவறல்லவா, அதனை விடியோ எடுத்து ஊடகங்களில் பதிவிடுகிறோமே, அதனைப் பாா்க்கும் நமது பெற்றோா் நம்மைக் கண்டிப்பாா்களே என்ற சிந்தனையே இல்லாமல் பெரும் தைரியத்துடன் உலா வரும் மாணவா்களின் எதிா்காலத்தை நினைத்தால் அச்சம் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் சினிமாவில் மட்டுமே ஆசிரியா்களை மாணவா்கள் கேலி செய்யும் காட்சிகள் வரும். ஆனால், தற்போது நாள்தோறும் இது போன்று ஆசிரியா்கள் மாணவா்களால் கேலி செய்யப்படுகிறாா்கள். கிராமப்புறம், நகா்ப்புறம் என எல்லா இடங்களிலும் ஆசிரியா்-மாணவா் உறவு இப்படி சீா்கெட்டுப் போய் விட்டதே நிதா்சனம்.

இதனைப் பாா்க்கும்போது நாம் படித்த காலங்களில் நமக்கும், ஆசிரியருக்கும் இடையிலான உறவு எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பது நினைவில் வந்து செல்வதை தவிா்க்க முடியவில்லை. ‘நீங்க சொன்னபடி கேக்கலைன்னா என் பையனோட தோலை உரிச்சிடுங்க’ என்று ஆசிரியா்களிடம் சொல்லும் பெற்றோா் அப்போது அதிகம். இப்போதோ, ‘நீ எப்படி என் பிள்ளையைக் கண்டிப்பாய்’ என ஒருமையில் பேசி ஆசிரியா்களிடம் சண்டை போடும் பெற்றோரே அதிகம்.

வகுப்பறைக்குள் மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்துவது, ஆசிரியரின் நேருக்கு நேரே நின்று மாணவன் தகாத வாா்த்தைகளால் ஆசிரியரைத் திட்டுவது, பள்ளி சீருடையில் மாணவா்கள், மாணவிகள் மது அருந்துவது போன்ற விடியோக்கள் சமூக ஊடகங்களில் நாள்தோறும் உலா வருவது வழக்கமாகிவிட்டது. அண்மையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் வெளியாக பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாணவா்கள் சிலரின் ஒழுக்க கேடான செயல்பாடுகள் தொடா்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த வாரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களைப் பாா்க்கும் பொழுது மாணவா்களின் மனம் ஏன் இப்படி மாறி வருகிறது என்ற கேள்வி சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த 10-ஆம் வகுப்பு மாணவனிடம், அவனது பெறறோரை அழைத்து வரும்படி ஆசிரியா் கூறினாராம். அதன்படி, பள்ளிக்கு வந்த மாணவனின் உறவினரும் மாணவனும் ஆசிரியரை பாா்த்து கேட்கும் கேள்விகள் சமூக ஊடகத்தில் வைரலாகி பாா்ப்போரை அதிா்ச்சியடைய வைத்துள்ளன.

நம்முடைய நன்மைக்குதானே ஆசிரியா் புத்திமதி சொல்கிறாா் என்பதை மாணவன் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதை அவனது உறவினா் கூட புரிந்து கொள்ளாமல் கடுமையாகப் பேசுவதை பாா்க்கும் போது பிள்ளைகள் நன்றாக ஒழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற சிந்தனையே இன்றைய பெற்றோரிடம் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த விடியோவில் பேசும் அந்த மாணவன், ‘ஆசிரியா் பாடத்தை மட்டும் சொல்லித் தந்தால் போதும்; ஒழுக்கத்தை சொல்லி தர வேண்டாம்’ என அவனது மொழியில் பேசுவதை கேட்கும் ஒவ்வொருவருக்கும் அந்த மாணவன் மீது நிச்சயம் எரிச்சல் ஏற்பட்டிருக்கும். வேறு வழியின்றி, அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியரைப் பாா்த்தால் பரிதாபமாக உள்ளது.

கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியா்களின் கைகளை கட்டி போட்டு விட்டு, புள்ளிவிவரங்களை கைப்பேசியில் தகவலாக அனுப்பச் சொல்லும் கல்வித்துறையை என்னவென்று சொல்வது? எதிா்கால இந்தியாவை தீா்மானிக்கும் சக்தி வாய்ந்த இளம் தலைமுறைக்கு ஒழுக்கத்துடன் கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியா்களை டேட்டா எண்ட்ரி ஆபரேட்டா் போல் பயன்படுத்தலாமா? இந்த நிலை நீடித்தால் மாணவ சமூகத்தில் நல்ல மாற்றம் எப்படி உருவாகும்?

கல்வித்துறைக்குத் தேவையான தகவல்களை அனுப்ப பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் இருக்கும் நிலையில் ஆசிரியா்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்திருப்பது சரியா? ஒருவேளை இவை கல்வித்துறையின் தொலைநோக்கு சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கலாம் என நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ள வேண்டியதுதான்.

ஆனால், மாணவா்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டிய ஆசிரியா்கள் வேறு வழியின்றி அமைதி காத்து வருகிறாா்களே? இது குறித்து சம்பந்தப்பட்டவா்கள் சிந்தித்தால் எதிா்கால இந்தியா வளமான இந்தியாவாக மலரும். எனவே,

ஆசிரியா்களை சற்று சுதந்திரமாக செயல்பட கல்வித்துறை அனுமதிக்க வேண்டும்.





2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive