Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூகநீதிக்கு வேட்டு வைக்கிறதா பள்ளிக் கல்வித் துறை -ஆசிரியர்கள் கட்டாயம் கட்டாயம்..வாசிக்க வேண்டும்

2023-03-21-257719-2de75078-5

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற வகையில் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக திருவள்ளூர் மாவட்டம், மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று காலை திருவள்ளுர் மாவட்டம், முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம் நடத்துவதாகவும், அதற்கு வரவேண்டும் என்றும் அழைப்பு வந்தது.

மாணவர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அப்பள்ளியில் அடிப்படை வசதியை மேம்படுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கம், தென்சென்னை மாவட்டம், பள்ளியின் வாயிலில் கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்தது. பள்ளியின் பெற்றோர்கள், ஊர்மக்கள் இருந்தார்கள்.‌ நானும் அவர்களுடன் இணைந்தேன்.

பள்ளியின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ஒருவர் என்று பலரும் பள்ளியை மேம்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும் என்ற தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினார். 

அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த‌ என்னை "மேடம் அழைக்கிறார்கள்" என்று ஒருவர் அழைத்தார். உள்ளே சென்றேன்

பள்ளி வாளாகத்திற்குள், வாயிலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு அம்மா நின்றுக் கொண்டு "நான் யார் தெரியுமா?" என்று அதிகார தொனியில் கேள்வி எழுப்பி, மறைந்த ஒரு ஆசிரியர்  பெயரைச் சொல்லி அவரின் மனைவி என்று கூறி தனது பெயரையும் சொன்னார். தன்னை குறித்துப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும் என்று கூறியதோடு, தனது‌ பள்ளி வாயிலில் எப்படி பேனர் கட்டுவீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். எனது தொலைபேசி எண்ணை கேட்டார். "என்ன செய்கிறேன் என்று பாருங்கள்" என்றார்.

"அம்மா, நீங்கள் எனது எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். என் மீது புகார் கொடுங்க. வழக்கு பதிவு செய்யுங்க. உங்களை தடுக்கவில்லை. இந்த பள்ளியில் நீங்கள் எந்த பொறுப்பில் இருக்கிறீர்கள்? இது எப்படி உங்களுக்கு மட்டும் உரிமை உள்ள பள்ளியாக மாறியது? மறைந்த ஒரு ஆசிரியர் பெயரைச் சொல்லி அவரின் மனைவி என்று நீங்கள் கூறவேண்டிய அவசியம் என்ன?  இங்கே நிற்பவர்கள் பெற்றோர், அவர்களின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர்.

ஊர்மக்கள் தங்களின் பகுதியில் உள்ள பள்ளியில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்றும் அதை அரசு சரிசெய்ய வேண்டும் என்றும் கோருகின்றனர். இங்கே வைக்கப்படும் கோரிக்கை தமிழ்நாடு அரசிற்கானாது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கைகள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதிராக எதுவுமே இல்லையே, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்" என்று கூறியபோது அந்த அம்மையார் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று தொடங்கி ஏதேதோ தொடர்பில்லாமல் பேசினார். இதற்கு மேல் அவர்களிடம் பேச ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து வெளிய வந்தேன்.

மாணவர் அமைப்பினர் கோரிக்கை மனுவை தலைமை ஆசிரியரிடம் வழங்குவதற்கு உள்ளே சென்றனர். அவர்களிடம் இருந்து மனுவைப் பெற மறுத்துள்ளார் தலைமை ஆசிரியர்.‌ அவர்களை அநாகரிகமாகவும் நடத்தியுள்ளார். அதே நாளில் மதுரையில் ஆய்வுக் கூட்டத்தின் போது "மனுக்கள் என்பது காகிதம் அல்ல; அது ஒரு மனிதனின் வாழ்க்கை" என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் பேசியுள்ளார். மாநிலத்தின் முதல்வர் சொல்வது பள்ளியின் முதல்வருக்கு புரியாமல் போனதா அல்லது அவரின் செவிகளில் விழாமல் போனதா?

அங்கிருந்த பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் இந்த அம்மா இந்த பள்ளிக்கு வந்த நாள் முதல் பிரச்சினைதான். அநாகரிகமாக மாணவர்களிடம் பேசுவது, பெற்றோரை மிரட்டுவது, கழிப்பறை சுத்தம் இல்லை, தண்ணீர் வசதி சரிவர இல்லை, விளையாட்டு திடல் பராமரிப்பு இல்லை, என்று பள்ளியின் நிலையை விளக்கினார்.

"அது சரி, இந்த அம்மா யார்?" என்று கேட்டதற்கு அந்த அம்மா தான் தலைமை ஆசிரியர் என்றனர்.

எங்கு சென்றாலும் புகார் என்ற நிலையில் பல பள்ளிகளுக்கு மாற்றலாகி கடைசியாக  தண்டனயாகத்தான் இங்கு வந்து இருக்கிறார். இங்கு வந்ததில் இருந்து "நான் யார் தெரியுமா?" என்பதுதான் அவரின் ஒரே கேள்வி. 

இவரின் நடவடிக்கை குறித்து எத்தகைய புகார் வந்தாலும் இவரை காப்பாற்ற யாரோ ஒரு "பாதுகாவலர்" பள்ளிக் கல்வித் துறையில் இருக்கிறார் என்பது மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

கையெழுத்து போட்ட குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை அடையாளம் கண்டு தலைமை ஆசிரியர் மிரட்டுவார். கடுமையான சொற்கள் பயன்படுத்துவார் என்று தங்களது அச்சத்தை  தெரிவித்தனர்.

இந்த பள்ளி இருபால் மாணவர் படிக்கும் பள்ளி. மிகச் சிறப்பாக இருந்த பள்ளி. கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று இங்கு வந்து அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை இன்று பாழடைந்துள்ளது.

"நிலைமை மாறவில்லை என்றால் இந்த பள்ளியை விட்டு வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்றனர் பெற்றோர் .

பள்ளியில் இருந்த CCTV கேமரா எங்கே போனது? Watchman இருக்கிறாரா? குடிப்பழக்கம், போதைப் பொருள் பழக்கம் இவை மாணவர்கள் மத்தியில் இருப்பதாக பெற்றோர் கவலையுடன் தெரிவிக்கின்றனர். சமூக விரோத செயல்பாட்டிற்கு பள்ளி வளாகத்தை சிலர் பயன்படுத்துகின்றனர். பள்ளி வளாகம் தூய்மையாக இல்லை. துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இல்லை. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தின் படி முழுமையாக பாடங்கள் நடத்தப்படுவதில்லை, தேர்வை நோக்கியே மாணவர்களை தயார் செய்கின்றனர். பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி காட்டுவது மட்டுமே தரத்திற்கான, ஆசிரியர் திறமைக்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது. முக்கிய கேள்விகளுக்கு விடையைப் படிப்பது என்ற மனப்பான்மை மாணவர்களிடம் வளர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை அச்சுறுத்துவது, பெற்றோரை மிரட்டுவது, அநாகரிகமாக பேசுவது இவை அதிக கவலைத்தருவதாக பெற்றோர் தெரிவித்தனர். 

"தெளிவு பெற்ற பெற்றோர் இந்த பள்ளியில் இருப்பதால்தான், மாணவர்கள் நலன் கருதி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தர போராட முன் வந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் இருந்து மாற்றிவிட்டால், உங்கள் குழந்தைகள் தப்பித்து விடுமவார்கள். மற்ற குழந்தைகளின் நிலை என்ன? கல்லூரி சாலை வெள்ளை மாளிகையில் குளிருட்டப்பட்ட அரையில் அமர்ந்துள்ள அதிகாரிகள் 'மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது' என்ற புள்ளிவிவரத்தை வைத்துக் கொண்டு இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவார்கள். அதைத்தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. இந்த பள்ளி இந்த‌ ஊர் மக்களின் பள்ளி. உங்கள் பள்ளியை விட்டு உங்கள் குழந்தைகள் ஏன் வெளியே அழைத்துச் செல்ல  வேண்டும்? இதே பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்கவைப்பது உங்கள் உரிமை, இந்த பள்ளியை மேம்படுத்துவதும் உங்கள் கடமை. அந்த பொறுப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க கூடாது" என்று அப்பள்ளியின் பெற்றோர்களிடம் கூறினேன்.

மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள பள்ளியின் பெற்றோர்கள் முன்வைக்கும் கோரிக்கை தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்தும்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பள்ளிக் கல்வியில் நல்ல மாற்றங்களை தமிழ்நாடு அரசு செய்யப்போகிறது என்ற மிகப் பெரும் எதிர்ப்பு தேர்தல் காலத்தில் உருவானது.

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போதும், கடந்த ஆட்சியில் நடந்த அவலங்களை அலசும் போதும், நிச்சயம் கல்வித் துறை சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

சுமார் 50 நபர்களிடம், துறை சார்ந்த சீர்கேடுகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்து கட்டுரைகள் பெற்று, 49 கட்டுரைகள் அடங்கிய "அறம் வெல்லும்" என்ற நூலை தேர்தல் நேரத்தில் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் வெளியிட்டார்கள். அந்த நூலை பள்ளிக் கல்வித்துறைச் சார்ந்தவர்கள் படித்தார்களா? என்று தெரியவில்லை.

புதிய அரசு அமைந்தது. பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பை ஆணையர் பொறுப்பாக மாற்றினார்கள். நினைத்ததும் நடப்பதும் வெவ்வேறாக உள்ளதே என்ற அச்சம் உருவானது. 

ஆசிரியருக்கான தகுதியும், அனுபவமும் பெற்றவர் வகிக்கும்  பொறுப்பாக அய்யா நெ.து.சு. காலம் தொடங்கி இயக்குநர் பதவி‌ இருந்து வருகிறது. மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தை  ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆட்சிப் பணி அதிகாரி பொறுப்பு வகிக்கும் பதவியாக மாற்றுவது ஒன்றிய‌ அரசின் நேரடி கட்டுப்பாட்டில் படிப்படியாக பள்ளிக் கல்வித் துறை சென்றுவிட வழிவகுக்காதா? மாநில‌ அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இது சிக்கலை உருவாக்காதா? என்ற கேள்வி எழுந்தது.

 "நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. அதை சீர்செய்யும் முயற்சிதான், சிறிது காலம் பொறுத்திருங்கள்" என்று சமாதானம் சொல்லப்பட்டது.

சொன்னவர்கள் மீது இருந்த நம்பிக்கை, நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு அமைதியானது.

தற்போது நடப்பது என்ன? ஆசிரியர் வேண்டும் என்று கேட்டால், மிகக் குறைந்த ஊதியத்தில், ஜீன் முதல் மார்ச் வரை தற்காலிக நியமனங்கள்.  பாடம் நடத்தும் ஆசிரியர் நிர்வாக பணிகள் செய்கிறார், பாட வேளை பாதிக்கிறது என்றால் தொண்டர் நியமித்து, அவர் பாடம் நடத்துவார் என்ற‌ ஏற்பாடு.  துப்புரவு ஊழியர்கள் கேட்டால், அது பள்ளியே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்கள் உருவாக்க பள்ளி மேலாண்மை குழுத் தேர்தலில் தலைமை ஆசிரியர் நினைத்தபடி அல்லது உள்ளுர் செல்வாக்கு மிக்கவர் நினைத்தபடி என்ற அளவில் தேர்வுகள் நடந்துள்ளது‌.  பெரும்பான்மையான பள்ளிகளில்  மேலாண்மைக் குழுத் தலைவர், தலைமையாசிரியர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடும் நிலை. அதையும் மீறி யாராவது ஒரு உறுப்பினர் குறைகளை எடுத்துக் கூறினாலே, விதிகளின்படி பள்ளி இயங்க வலியுறுத்தினாலோ, அந்த குறிப்பிட்ட மேலாண்மைக் குழு உறுப்பினருக்கு பல வகையிலும் சிக்கலை உருவாக்குவது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதில்லை. இவை எதைப்பற்றியும் கவலைப்படாத பள்ளிக் கல்வித் துறை.

ஊழல், நிர்வாக சீர்கேடு. இவை இரண்டையும் சரிசெய்ய தானே ஆணையர் நியமிக்கப்பட்டார். ஆனால் நடப்பது என்ன?

பள்ளிக் கல்வித் துறையில் நேர்மையாக பணியாற்றுபவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர். நீர்வாகாத்தைச் சீர்கெடுப்பவர்கள், ஊழலுக்கு வழிவகுப்பவர்கள் முன்பைவிட தைரியமாக தவறுகளை செய்கிறார்கள். இயக்குநர் பதவிதான் ஆணையர் பதிவியானதே தவிர நிர்வாகச் சீர்கேடு பள்ளி அளவில் நீடிப்பது மட்டுமல்ல அது தீர்க்க முடியாத சிக்கலாக மாறியுள்ளது. 

இந்த சூழலை சரிசெய்வதற்கு பதிலாக, இந்த சூழலைக் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, முழுக்க முழுக்க தொண்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகளைக் கொண்டு வந்திடவும், ஆசிரியர்களை தங்களின் வழிகாட்டுதல்படி நடந்துக் கொள்பவர்களாக மாற்றுவதற்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல்வேறு ஆலோசனைகளை தங்களின் ஆய்வுகள், அறிக்கைகள் மூலம் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தருகின்றனர்.‌ தங்களுக்கு வசதியான ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு, அவை அரசின் ஆணையாக வெளியிடப்படுகிறது.

பள்ளி செயல்பாட்டில் நேரடி தொடர்புள்ளவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் கூறும். அவர்கள் மொழியில் அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர், மாணவர், பெற்றோர் மட்டுமே நேரடித் தொடர்பு உள்ளவர்கள்,(Stakeholders). அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தும் நபர்களே வாக்கு மூலம் கொடுக்கும் சாட்சிகள். அத்தகைய நபர்களே நேரடித் தொடர்பு இருப்பவர்களை பிரதிநிதிப் படுத்துகிறார்கள். முற்றிலும் ஜனநாயகமற்ற அணுகுமுறை. உலகின் பல பகுதிகளில் உள்ளுர் மக்கள் தான் அரசுப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர். அரசு நிதியில் இயங்கும் பொதுப்பள்ளிகளாக அவை செயல்படுகின்றன.பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த சமூகமே நேரடித் தொடர்பு உடையது.

மேட்டுக்குடி தன்மையுடன் சிக்கல்களை அணுகுவது. உடனடி தீர்வு மட்டுமே இலக்கு. சிக்கல்களை கண்டுபிடித்து சொல்வது, அதே வேளையில், சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை வெளியிட மறுப்பது. நிரந்தர தீர்வு குறித்து எந்த புரிதலும் கிடையாது. கல்வித் தருவது அரசின் கடமை  என்று உணர்த்துவதற்கு பதிலாக, மாணவர்களுக்கு அரசு செய்யும் சலுகையாகவும், தொண்டாகவும் கருதுவது, வாய்ப்பை பயன்படுத்தி அடிபணிந்து நடந்துக் கொள்ள மாணவர்கள் பழக வேண்டும். இவையே  அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறை.

இருக்கும் இடத்தில், சங்கடமில்லாமல், உத்தரவுபோட மட்டுமே பழகிபோனதால், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறை அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. 

சமூக மாற்றத்திற்கான கருவியே கல்வி என்ற புரிதலே இல்லாமல், தனிமனித தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதே கல்வி‌ என்று நம்பும் அதிகாரிகள். கேள்வி எழுப்புவது, கூர்மையாக விவாதிப்பது, மாற்றத்திற்கான புதிய வழிகளைச் சொல்வது அதிகாரிகளுக்கு பிடிக்காதவை.‌ அத்தகையக் கருத்துகளுக்கு அதிகாரிகள் இடம் தவறுவதில்லை. சொல்வதை கேட்பவர்கள், தனக்கு சாதகமாக நடந்துக் கொள்பவர்கள் ஆகியோரை உடன் வைத்துக் கொண்டு தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதே அதிகாரிகளின் அணுகுமுறையாக உள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆண்டிற்கு ஒரு முறை கூட நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று முழுமையான கல்வியியல் ஆய்வை மேற்கொள்வதில்லை. ஆய்விற்கு செல்லும் அலுவலர்களும்,  ஆய்வின் போது கண்டறியப்படும் குறைகளைப் பக்குவமாக ஆசிரியர்கள், ஊழியர்கள் புரிந்துக் கொள்ளும்படி எடுத்துக் கூறி, ஆய்வு முடிந்ததும் உற்சாகத்துடனும், புது நம்பிக்கையுடனும், புதிய பார்வையுடனும் ஆசிரியர்கள் தங்களின் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய தூண்டுவதற்கு பதிலாக, ஆசிரியர்களை சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, என்ன தவறு செய்தோம் என்றே அவர்கள் புரிந்துக் கொள்ள இயலாத வகையில் அதிகாரிகள் நடந்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆசிரியர்களை கண்ணியத்துடன் நடத்தத் தெரியாத அதிகாரிகளால் பள்ளிக் கல்வியை எவ்வாறு சீர்செய்ய முடியும். 

காலைக் கூட்டம் தொடங்கி பள்ளி வேளை நேரம் முடிய, முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த ஆய்வை ஆண்டிற்கு ஒரு பள்ளியில் கூட மேற்கொள்வதில்லை. அதிகாரிகள் என்றால் உத்தரவு போடுபவர்கள், குறைகளை பெரிதுபடுத்தி ஆசிரியர்களை, ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்கள் என்ற நிலைதான் பள்ளிக் கல்வித் துறையில் நிலவுகிறது.

 ஈரோடுகாரரோ,  திருச்சிகாரரோ, அமைச்சராக யார் இருந்தாலும்  அதிகாரிகள் கூறுவதுதான் நடக்கும் என்பதே பள்ளிக் கல்வித் துறையின் எதார்த்தம்.

ஆக, ஒன்று தெளிவாகிறது, அரசுப் பள்ளிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு. அனைவருக்கும் கல்வி. கண்ணியமிக்க குழந்தைப் பருவம். அதை ஒழித்தால் தான் இட ஒதுக்கீடு ஒழியும். அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்த 1980களில் தொடங்கி நாற்பதாண்டுகளாக சூழ்ச்சி நடக்கிறது. இதை ஓரளவு புரிந்துக் கொண்ட மேனாள் முதல் அமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்கள் சமமான, சீரான கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் "சமச்சீர்க் கல்வி" என்ற கோட்பாட்டை முன்னெடுத்தார். அவர்காலத்திலேயே அதை விரும்பாதவர்கள், தற்போது உள்ள சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் கிடைக்க விடாமல் செய்ய அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றனர்.‌

அரசுப் பள்ளிகளை‌ ஒழிக்கும்  ஒன்றிய அரசின் சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் சுலபமாக அரங்கேற்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் பலவகையிலும் முயற்சி செய்கின்றனர். அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்களை விரட்டும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெறுகிறது.

கல்வி செயல்பாட்டிற்கு கட்டணமில்லா பொருட்கள் தருகிறோம். உரிய நேரத்தில், உரிய முறையில் அவை மாணவர்களுக்கு கிடைக்கிறதா? என்பதே நம் முன் உள்ள முக்கிய கேள்வி.

கண்காணிப்பு இல்லாத எந்த நிர்வாகமும் சிக்கலை சந்திக்கும். கண்காணிக்க கட்டமைப்பு உள்ளது. புள்ளிவிவரங்கள் சேகரிக்க காட்டப்படும் ஆர்வம், பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக பயன்படும் வகையில் நிறைவேற்றப்படுவதை உத்தரவாதப்பாடுத்த இயலவில்லை. பொறுப்பை தட்டிக் கழிப்பது, பழியை அடுத்தவர் மீது சுமத்தி விடுவது.‌ தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுப்பது. மாற்றுக்  காருத்தை ஆராயவும், விவாதிக்கவும் மறுப்பது.‌ இவை பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாட்டிற்கு பெரும் இடையூறாக உள்ளது.‌

தவறு செய்யும் தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ எங்கு மாற்றம் செய்யப்பட்டாலும் அவர் கவலைப் பட போவதில்லை. தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இல்லாத வரை அவர்கள் மாறமாட்டர்கள்.

தவறு செய்பவர்களை திருத்த வேண்டும். திருந்த விருப்பமில்லாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிக்கலை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்போது அதிகாரிகளின் அணுகுமுறை நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

"இதற்குத்தான், ஆசிரியரே வேண்டாம்! தொண்டர்களை வைத்து எண்ணும் எழுத்தும் கற்றுத் தருகிறோம்" என்ற பதில் தருகிறார்கள்?

சமூகநீதியின் அடிப்படையில் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளையும் வலுப்படுத்துவோம் என்ற உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய அரசு, அவ்வாறு செய்யாமல்; அரசுப் பள்ளிகளில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து சீர்மைப்பள்ளிகள்,  மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து, உயர்தர கற்றல், கற்பித்தல் வாய்ப்புகளை அப்பள்ளிகளில் உருவாக்கித் தருகிறோம் என்கிறார்கள்.

அத்தகைச் "சிறப்பு பள்ளிகளில்" பயிலும் மாணவர்கள் எத்தகைய உயர்கல்விக்கான தேர்வுகளிலும் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி அளிப்போம் என்கின்றனர்.

மாவட்டத்திற்கு ஒரிரு பள்ளிகள் இவ்வாறு சீர்மைப்பைப் பள்ளிகளாக, மாதிரிப் பள்ளிகளாக இருக்கும். மற்ற பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும். இது இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?

அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை வழங்காமல் சிலருக்கு உயர்தர வசதிகள், பலருக்கும் அறைகுறை வசதிகள் என்பது குழந்தைகளுக்கு எதிராக நடக்கு குற்றமாகாதா?  

"சிறந்த குழந்தைகளுக்கு" சிறப்பான வாய்ப்புகள் மற்ற குழந்தைகளுக்கு சாதாரண வாய்ப்புகள்.  சீர்மைப்பள்ளி, மாதிரிப்பள்ளி என்ற வகையில் அரசு தனது பள்ளிகளை வகைப்படுத்தி வைத்திருக்கும் என்பதை எப்படி சமூகநீதி அடிப்படையில் நியாயப் படுத்த முடியும்? உலகம் முழுக்க குழந்தைகள் நலனை ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய பாகுபாடுகளை எவ்வாறு மதிப்பிடும்.

மாதிரிப் பள்ளிகள், சீர்மைப்பள்ளிகள் என்று சொல்லிவிட்டாலே, அத்தகையப் பள்ளிகளில் சேர ஏதோ ஒரு வகையில் மாணவர்கள் தேர்ந்தெடுத்துதானே ஆகவேண்டும். அது பொதுத் தேர்வா? மதிப்பீடா? அளவீடா எந்த பெயர் தந்தாலும் பலரில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிறந்த மாணவர்கள், ஆர்வமிக்க மாணவர்கள், உயர் கல்விக்குப் போடாடிப்போட தகுதிபெற்ற மாணவர்கள் என்பதுதானே பொருள்? மற்ற மாணவர்கள்?

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறை நடத்தும் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கு இணையாக ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் போன்ற‌ அரசின் நிதியில் இயங்கும் பள்ளிகளில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பல ஆண்டுகளாக பெரும் நெருக்கடியில் இயங்கி வருகின்றன.

சீர்மைப்பள்ளிகளும், மாதிரிப் பள்ளிகளும் பிற அரசுப் பள்ளிகளைப் பலவீனப்படுத்திவிடும். மாதிரிப் பள்ளிகளுக்குத் தேர்வாகாத மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மிகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பெற்றோருக்கு மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதிப்படுத்துவது அரசின் கடமை. 

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகியவற்றில்‌  மட்டுமே மாணவர்கள் கண்ணியத்துடன் கல்வி கற்க இயலும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் சமமான சீரான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கலைஞரின் கனவு நிறைவேற  தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

- பிரின்ஸ் கஜேந்திர பாபு





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive