பிளஸ் 2 பொதுத் தேர்வில், மொழி பாடத் தேர்வை, 47 ஆயிரத்து 943 மாணவர்கள் எழுதாதது குறித்து, சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அமைச்சர் அளித்த பதில்:
'பொதுத் தேர்வு எழுத மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என அமைச்சர் கூறி விட்டார்' என்றனர்.
அந்தர் பல்டி
அந்தச் செய்திக்கு, விவாதங்கள் நடத்துகின்றனர். அப்படி சொல்லப்படவே இல்லை என நாங்கள் திருத்தி சொல்லும்போது, ஒரு பத்திரிகையில், 'அமைச்சர் அந்தர் பல்டி' என்று தலைப்புச் செய்தி போடுகின்றனர்.
பத்திரிகைகள் வெளியிடும் தலைப்புச் செய்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விழியை பிடுங்கி எறிவதாக இருக்கக் கூடாது.
பகுத்தறிந்து பார்க்கும் செய்தியாக இருக்க வேண்டும்; பதற்றங்களை உருவாக்கும் செய்தியாக இருக்கக் கூடாது என்பதை, குறிப்பாக ஒரே ஒரு பத்திரிகைக்கு, வேண்டுகோளாக வைக்கிறேன்.
கடந்த 2020 - 2021ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் தான் இன்று, பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
முந்தைய 2021 - 2022ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத் தேர்விற்கு பதிவு செய்த 8.85 லட்சம் மாணவர்களில், 41 ஆயிரத்து 166 பேர் வரவில்லை; 83 ஆயிரத்து 811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாதவர்கள், வருகை தராதவர்கள், 1.25 லட்சம் மாணவர்கள்.
வாய்ப்பு
இதில் இடைநின்ற மாணவர்கள், 78 ஆயிரம் பேரை தேர்வு எழுத வைத்துள்ளோம். பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு 2022 - 23ம் கல்வியாண்டில், 8.36 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர்.
இதில், 47 ஆயிரத்து 943 மாணவர்கள், மொழித்தாள் தேர்வு எழுதவில்லை. இதில், அரசு பள்ளிகளில், 38 ஆயிரத்து 15; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8,848; தனியார் பள்ளிகளில் 1,080 மாணவர்கள் அடங்குவர்.
இதில், 40 ஆயிரத்து 509 மாணவர்கள், முந்தைய ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிக்கு வராத, தேர்ச்சிப் பெறாத பிளஸ் 1 மாணவர்கள்.
கொரோனா தொற்றால் மாணவர்கள் வருகை குறையும் என எதிர்பார்த்து, பொதுத் தேர்வு பதிவு பட்டியலில் இடம்கொடுக்க வேண்டும் என கருதப்பட்டது.
நீண்ட காலம் பள்ளிக்கு வராத, இடைநிற்றல் மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்காக, சிறப்பு நிகழ்வாக இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, வருகை பதிவேட்டில் எவ்விதமான வரைமுறையும் கடைபிடிக்காமல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடவடிக்கை
வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு, 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம். நான்கு வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்கள், இடைநிற்றல் மாணவர்களாக அறியப்படுவர்.
தற்போது, தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, தகுந்த ஆலோசனை வழங்கி, ஜூலை மாதம் துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...