கடந்த வருடம் செப்டம்பர் 5-ல் பிரதமர் மோடியால் பிஎம் ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வரும் இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்துடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதன் பிறகு, பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளிகள் கொண்டு வரப்பட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மேம்படுத்தப்படும்.
இந்நிலையில் இதுவரை 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. டெல்லி, தமிழ்நாடு, கேரளா, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க அரசுகள் இன்னும் இத்திட்டத்தை ஏற்கவில்லை. இவை அனைத்துமே பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழகம் உள்ளிட்ட இந்த 7 மாநிலங்களுக்கு மீண்டும் நினைவூட்டி கடந்த வாரம் கடிதம் எழுதியதில், பிஹார், ஜார்க்கண்ட் மட்டும் பரிசீலனையில் உள்ளதாக பதில் அனுப்பின. இந்த திட்டத்தால் அந்த 7 மாநிலங்களின் பல லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு பலன் கிடைக்கும். ஆனால், இதை ஏற்காத மாநிலங்களில் அரசியலில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் உணர் வதாக தெரியவில்லை” என்றனர்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் வந்த பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் உட்பட பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. பசுமை பள்ளிகளாக மாற்றுதல், சூரியசக்தி மூலம் எல்இடி விளக்கு வசதி, சத்துப்பொருட்கள் கொண்ட தோட்டம், தண்ணீர் சேமிப்பு, குழந்தைகள் கல்வி நிலை மீதான கவனம், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பலவும் அதில் உள்ளன.
இந்தப் பலன்களை குழந்தைகள் அனுபவிக்க அந்த 7 மாநில அரசுகளும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டி இருக்கும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தங்கள் மாநிலத்துக்கென தனிக் கொள்கையை உருவாக்குவதில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசுகளின் தனிக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் அங்கீகரித்து, பிஎம் ஸ்ரீ திட்டப் பலனை அளிக்க முன்வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...