நாடு முழுதும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய, மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஜே.இ.இ., முதற்கட்ட முதன்மை தேர்வுக்கான முடிவுகள், நேற்று வெளியானது.
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை சார்பில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டிற்கான முதற்கட்ட முதன்மை தேர்வு, ஜன., 24, 25, 29, 30, 31, பிப்., 1ல், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான தேர்வும், கடந்த மாதம், 28ம் தேதியில், பி.ஆர்க்., - பி.பிளானிங் போன்ற படிப்புகளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை, 2.43 லட்சம் மாணவியர், இரு திருநங்கைகள் உட்பட, 8.23 லட்சம் பேர் எழுதினர். நாடு முழுதும், 290 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே, 18 நகரங்களிலும், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட, 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு தாள் - -1க்கான முடிவை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
இதில், 20 பேர், தேசிய தேர்வு முகமையின், 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் மாணவியர் யாரும் இடம் பெறவில்லை. தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான தாள் - -1க்கான தேர்வு முடிவுதான் வெளியாகி உள்ளது. 46 ஆயிரத்து, 465 பேர் விருப்பம் தெரிவித்த, பி.ஆர்க்., - பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான தாள்- - 2ஏ, 2பி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்களுக்கான விண்ணப்பப்பதிவு, jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது.
அடுத்த மாதம், 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான தேர்வு வரும், ஏப்., 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...