தமிழகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை அரசின் நிதியை கையாள உதவும் சிங்கிள் நோடல் கணக்கு சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது. அதற்கென கணினி உதவியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாநில அரசு சிங்கிள் நோடல் கணக்கு எனப்படும் எஸ்.என்.ஏ., கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசின் நிதி நேரடியாக பள்ளி கணக்கில் வரவு வைக்கப்படும். அதை எடுத்து பள்ளி மேலாண்மை குழு உபகரணங்கள், மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு செலவழிக்கலாம்.
இந்த கணக்குகளை தலைமை ஆசிரியர்கள் கையாள்கின்றனர்.
மேக்கர் ஐ.டி., வெண்டர் ஐ.டி., செக்கர் ஐ.டி., என மூன்று தளங்களில் இயங்கும் இந்த இணையத்தில் ஒவ்வொரு தளத்திலும் 'கேப்ட்சாக்கள்' எனப்படும் குறியீடு கடவு சொல் வருகின்றன. இதில் ஒன்று தவறானாலும் மீண்டும் முதலில் இருந்து முயற்சிக்க வேண்டியுள்ளது. சில தடவைகளுக்கு மேல் முயற்சித்தால் 'லாக்' ஆகி விடுகிறது.
இது குறித்த கணினி பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு போதியளவு அளிக்கப்படவில்லை. ஏற்கனவே எமீஸ் இணையதளத்தை கையாளும் சூழலில் இதுபோன்ற பணிகள் கற்றல் செயல்பாட்டை குறைக்கும் வகையில் உள்ளது என தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்பு செக் பவர் இருக்கும் போது பள்ளி மேலாண்மை குழு தலைவர், நடத்துனரான தலைமை ஆசிரியர் கையெழுத்திடுவர். ஆனால் தற்போது எஸ்.என்.ஏ., முறையால் இரு கையெழுத்துக்கு வழியில்லாது, மறைமுகமாக பள்ளி மேலாண்மை குழுவின் அதிகாரத்தை குறைப்பது போல் உள்ளது என்கின்றனர்.
ஒரே வங்கியில் சென்னையில் தான் அப்டேட் செய்யப்படுவதால் சர்வரில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் பணம் செலவளிக்க அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதே நேரம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவளிக்க நிர்பந்தப்படுத்தப்படும் நெருக்கடியும் உள்ளதால் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் திண்டாடுகின்றனர். எவ்வளவு பணம் வருகிறது என்றும், அதை எவ்வாறு கணக்கீடு செய்து திட்ட வரையறைகள் செய்வது என்பதற்கும் கூட நேரம் இல்லாத சூழல் உள்ளது.
எஸ்.என்.ஏ., கணக்கை கையாள கணினி நிலை உதவியாளரை நியமிக்க வேண்டும் என்றும், விரைந்து நிதியை விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...