பள்ளி, கல்லூரிகளில் தமிழை பார்த்தேன் என்று யாரேனும் கூறினால் 5 கோடி ரூபாய் பரிசு தருவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து மதுரை வரை தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை ராமதாஸ் தொடங்கியுள்ளார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த தொடக்க விழாவில் பேசிய அவர், தமிழ் இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது என்றும், அப்படி யாராவது சொன்னால் பொய் சொல்வதாக அர்த்தம் என்றும் கூறினார்.
தொன்மையான மொழியான தமிழ் மொழியை தொலைத்து விட்டோம் என்று வேதனை தெரிவித்தார். உலக தாய்மொழி நாளில், சென்னையில் தொடங்கி மதுரை வரை 8 நாட்கள் தமிழைத் தேடி விழிப்புணர்வு பயணத்தை ராமதாஸ் மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், " வங்கமொழியின் உரிமையைக் காப்பதற்கான போராட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னுயிரை ஈந்த டாக்கா பல்கலை. மாணவர்களின் நினைவாக உலகத்தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி உயிரினும் மேலானது என்பதே இந்த நாள் சொல்லும் செய்தி ஆகும்.
தமிழ்நாட்டில் தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அதற்காக எந்த ஈகத்தையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். அன்னைத் தமிழைக் காக்க ‘தமிழைத் தேடி...’பயணத்தை இன்று தொடங்கிறேன். தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம்" என்று பதிவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...