அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP–2 தேர்வு பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதால், மறுதேர்வு நடத்திட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” GROUP–2 தேர்வின் முதன்மை தேர்வு கட்டாய தமிழ் மொழித் தாள், பொது அறிவுத் தாள் என இருதாள்களை உள்ளடக்கியது.
இதில் வருகைப்பதிவேட்டில் இருந்த தேர்வர்களின் பதிவெண்கள் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
பிற்பகல் தேர்வு நேரம் 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி, பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர்.
முற்பகல் தேர்வானது கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு என்பதால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98%-க்கும் அதிகமான தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருப்பினும் முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள்கள் திருத்தும்போது கருத்தில்கொள்ளப்படும்.
பிற்பகல் பொதுஅறிவுத்தாள் தேர்வு அனைத்து மையங்களிலும் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடிந்தது. மேலும், இதில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண்களே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகை பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமதத்திற்கு காரணம். இதற்கு காரணமான அனைவர்மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...