தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில், 42 வயது வரை உள்ளவர்கள் தான், நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சீனியாரிட்டி மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுமையாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில், 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால், ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை.
அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பரில், கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் வரை, சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில், ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவுக்கு, 40ல் இருந்து, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 45ல் இருந்து, 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.
கடந்த, 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி, 2023ம் ஆண்டு, 1ம் தேதியில் இருந்து, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு, பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு, 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனவே, இனி தமிழகத்தில், பொதுப்பிரிவில், 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில், 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்பு முடித்திருந்தாலும், அது பயனில்லை என்ற நிலையும் உருவாகி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...