மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கு நடந்த எழுத்துத் தேர்வில், ஒரு மையத்தில் வினாத்தாள், 'லீக்' ஆனது. இதனால், மைய பொறுப்பாளரான தாசில்தார் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
மாவட்டத்தில், 209 கிராம உதவியாளர் காலியிடங்களுக்கு 13 ஆயிரத்து 958 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தின் 11 தாலுகாக்களிலும் உள்ள 22 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது.
நேர்காணல்
இதில், 11 ஆயிரத்து 265 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 2,693 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். இத்தேர்வுக்கு பின் வரும் 16 முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் சைக்கிள் ஓட்டுதல் உட்பட பல தகுதிகள் நேர்காணல் செய்யப்படும். இத்தேர்வில் தெற்கு தாலுகாவுக்கான தேர்வு, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி மையத்தில் நடந்தது. இந்த மையத்திற்கான வினாத்தாள் நேற்று லீக் ஆனதாக தகவல் பரவியது.
இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் படி, வருவாய்த் துறையினர் விசாரித்தனர். தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது உண்மை எனத் தெரிய வந்ததால், பொறுப்பாளரான தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரம், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில், தெற்கு தாலுகாவிற்கு நில எடுப்பு தாசில்தார் முத்துப்பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது: ஐந்தாம் வகுப்பு தகுதியில் இப்பணி நியமனம் நடக்கிறது. இதற்கான வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் இரு பத்திகளை கொடுத்து இருப்பர். இதை அதில் உள்ளவாறே காப்பி அடித்து பார்த்து எழுத வேண்டும். தவறின்றி எழுத, படிக்கத் தெரிகிறதா என்று அறியவே இந்த தேர்வு.
பாதிப்பு வராது
இதற்கான வினாத்தாளை வெளியிடங்களில் தான் ஜெராக்ஸ் செய்ய வேண்டியுள்ளது. அப்போது இது வெளியாகி இருக்கலாம். வினாத்தாளில் பதில் எழுதக்கூடிய கேள்வி கிடையாது. எனவே, இது வெளியானாலும் யாருக்கும் பாதிப்பு வராது தான்.
இருப்பினும் தேர்வுக்குரிய விபரம் வெளியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை நடத்த வருவாய்த் துறையினருக்கு நிதி எப்போது வழங்கப்படும் என தெரியவில்லை; சொந்த பணத்தையே செலவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...