சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடர்ந்து 5 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாள்களில் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...